இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பரவல், தற்போது மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதிதாக பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,599 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,853 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 14,278 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,82,798 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 1,88,747 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.74 கோடியைக் கடந்தது
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.74 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,74,31,033 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,29,35,586 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 26 லட்சத்து 04 ஆயிரத்து 786 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 2,18,90,661 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,731 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,586 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் 80,024 பேருக்கும், ரஷ்யாவில் 10,595 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது