கிழக்கு லடாக்கில் சீனாவின் ஊடுருவல் முயற்சியால் இருதரப்பு மோதல், உயிரிழப்புகள் என கடந்த மே மாதத்தில் இருந்து பதற்றம் நிலவி வருகிறது. அங்கு அமைதி ஏற்படுத்துவதற்காக இருதரப்பும் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளின் பலனாக கடந்த மாதத்தில் இருந்து இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெற்று வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க, மும்பையில் கடந்த அக்டோபர் 12-ந்தேதி திடீரென மிகப்பெரிய மின்தடை சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. இதனால் மின்சார ரெயில் போக்குவரத்து பாதிப்பு, கொரோனா ஊரடங்கால் வீடுகளில் இருந்தே பணியாற்றியவர்களுக்கு இடையூறு என மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. பொருளாதார கட்டமைப்புகளும் கணிசமான பாதிப்புகளை சந்தித்தன.
இந்த தடங்கலை சீரமைத்து அத்தியாவசிய பணிகளுக்கு மின் இணைப்பு வழங்கவே 2 மணி நேரம் ஆனது. இந்த திடீர் மின்தடை குறித்த விசாரணைக்கும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இந்தியா-சீனா ராணுவ மோதலால் லடாக்கில் பதற்றம் உச்சத்தில் இருந்த நாட்களில் சீன ஹேக்கர்கள் இந்திய மின்சார துறையின் கணினிகளில் புகுந்து நாசவேலைகளில் ஈடுபட்டதை அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டறிந்து உள்ளது.
அதாவது அமெரிக்காவின் மசாசூசெட்சை சேர்ந்த ‘ரிக்கார்டட் பியூச்சர்’ என்ற அந்த நிறுவனம், சீன அரசின் ஆதரவு கும்பல் ஒன்று இந்திய நிறுவனங்களில் ஊடுருவும் செயல்களில் ஈடுபட்டு வருவதை கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கவனித்து வந்து உள்ளது. பின்னர் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த ஊடுருவல் முயற்சிகள் உச்சத்தில் இருந்தை கண்டறிந்து உள்ளது.
மின்தேவை மற்றும் வினியோகத்தை சமநிலையில் வைத்திருக்கும் 5 மண்டல வினியோக மையங்கள் உள்பட இந்தியாவின் தனித்துவமிக்க 10 மின்துறை நிறுவனங்களை இந்த ஹேக்கர்கள் தங்கள் இலக்காக வைத்திருந்ததாக அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன் 2 துறைமுகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த கும்பலின் இலக்காக இருந்ததாகவும் அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சீன ஹேக்கர்களின் இந்த ஊடுருவல் மற்றும் வைரஸ் தாக்குதல் காரணமாகவே மும்பை மின்தடை ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை நியூயார்க் டைம்ஸ் நாளிதழும் வெளியிட்டு உள்ளது. அதாவது இந்தியா தனது எல்லை உரிமை கோரல்களை தீவிரமாக எடுத்துவைத்தால், அங்கு என்ன நடக்கும் என்று சீனா விடுக்கும் எச்சரிக்கைதான் இதுவோ? என்ற சந்தேகத்தை மும்பை மின்தடை எழுப்பி இருப்பதாக அந்த நாளிதழில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, இது பொறுப்பற்ற மற்றும் தவறான நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு என தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘சைபர் பாதுகாப்பை சீனா உறுதியாக கொண்டுள்ளது. எந்தவகையான சைபர் தாக்குதலையும் நாங்கள் எதிர்ப்பதுடன், அதற்கு எதிராக போராடியும் வருகிறோம். இந்த சைபர் தாக்குதலின் வேரை கண்டறிய முடியாது. எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் நீங்கள் யூகிக்கவோ, அல்லது ஒரு நாட்டை குற்றம் சாட்டவோ முடியாது. இந்த முயற்சிகளை சீனா உறுதியாக எதிர்க்கிறது’ என்று தெரிவித்தார்.
அதேநேரம் சீன ஹேக்கர்களின் இந்த நாசவேலை குறித்து மத்திய அரசு சார்பில் எந்த கருத்தும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லடாக் மோதல் மூலம் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவ முயன்ற சீனா, அதில் வெற்றி பெற முடியாததால் ஹேக்கர்கள் மூலம் இந்திய உள்கட்டமைப்பு துறைகளில் நாசவேலைக்கு முயன்றிருக்கும் தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.