பயணிக்கு மாரடைப்பு; பாகிஸ்தானில் தரையிறங்கிய இந்திய விமானம்
02 Mar,2021
சார்ஜாவிலிருந்து உ.பி., மாநிலம் லக்னோவுக்கு இன்று (மார்ச் 02) காலை வந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தங்களின் ‛6இ 1412' என்ற விமானம் சார்ஜாவிலிருந்து லக்னோவுக்கு வந்து கொண்டிருந்தது. பயணி ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கராச்சிக்கு திருப்பப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அப்பயணியை காப்பாற்ற முடியவில்லை. வரும் வழியிலே அவர் இறந்துவிட்டார் என விமான நிலைய மருத்துவ குழுவினர் அறிவித்தனர் என கூறியுள்ளது. மாரடைப்பால் இறந்த 67 வயது நபர் ஹபீப்-உர்-ரஹ்மான் என அடையாளம் கண்டுள்ளனர்.
நெஞ்சு வலி என கூறியவுடன் விமானி வழியிலிருந்த கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை தொடர்புகொண்டுள்ளார். அவர்கள் மனிதாபிமான அடிப்படையில் தரையிறங்க அனுமதித்துள்ளனர். ஆனால் விமானம் தரையிறங்குவதற்கு முன்னரே ரஹ்மான் இறந்து போயுள்ளார். விமானத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யும்படி கராச்சி அதிகாரிகளிடம் இந்திய விமானி கோரிக்கை வைத்துள்ளார். அதனை அவர்கள் நிராகரித்துவிட்டனர். அங்கிருந்து ஆமதாபாத்திற்கு விமானம் வந்து கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு பின்னர் லக்னோவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது