எல்லையில் சீனா எழுப்பியுள்ள புதிய கட்டிடங்கள்... புதிய சாட்டிலைட் படங்களால்
01 Mar,2021
டெல்லி: இந்திய - சீன எல்லையில் அமைந்துள்ள டெப்சாங் பகுதியில் சீன ராணுவம் புதிய கட்டுமானங்களைக் கட்டிவருவது, தற்போது வெளியாகியுள்ள சாட்டிலைட் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்தாண்டு மே மாதம் முதலே எல்லையில் மோதல் போக்கு நிலவியது. இதனால் எல்லைப் பகுதியில் இரு ராணுவமும் அதிகளவில் வீரர்களைக் குவித்தனர். இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இரு தரப்பு ராணுவ அதிகாரிகளும் பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன் விளைவாகக் கடந்த சில வாரங்களுக்கு முன் இரு தரப்பு ராணுவத்திற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி எல்லையில் குவிக்கப்பட்ட ராணுவத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன. இருப்பினும் டெப்சாங் உள்ளிட்ட சில பகுதிகளில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவின் கபெல்லா ஸ்பேஸ் என்ற நிறுவனத்தின் சாட்டிலைட்கள் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி எல்லையை எடுத்து புகைப்படங்களை தற்போது இந்தியா டூடே செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் டெப்சாங் பகுதியில் சீன ராணுவம் புதிய கட்டுமானங்களைக் கட்டியுள்ளது தெளிவாக தெரிகிறது.
மன்னிப்பு கேளுங்கள்... இல்லையென்றால் வழக்கு தொடர்வேன்... அமித் ஷா பேச்சுக்கு நாராயணசாமி பதிலடி
இந்தியாவிலேயே மிக உயர்ந்த இடத்தில் அமைந்துள்ள டவுலட் பெக் ஓல்டி (Daulet Beg Oldie) என்ற இடத்திலிருந்து வெறும் 24 கிலோமீட்டர் தொலைவில் இந்தப் புதிய கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன.
சீனாவின் கண்காணிப்பு மையம் அமைந்திருந்த பகுதியில் முதலில் மூன்று பெரிய கட்டங்கள் மட்டுமே இருந்தன. இப்போது அந்த மூன்று பெரிய கட்டடங்களைச் சுற்றிலும் பல புதிய கட்டடங்களைச் சீன கட்டியுள்ளது சாட்டிலைட் படங்களின் மூலம் தெளிவாக தெரிகிறது.
கடந்தாண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு தரப்பு ராணுவங்களும் மோதலில் ஈடுபட்டனர். அதன் பின்னர் சீனா எல்லையில் குவிக்கப்படும் ராணுவத்தின் எண்ணிக்கையைப் பல மடங்கு அதிகரித்தது. அப்போது குவிக்கப்பட்ட ராணுவ வீரர்கள் தங்குவதற்காக இந்தப் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.