சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் காலமானார்.
நுரையீரல் தொற்று சிறுநீரக பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
தோழர் தா பாண்டியனின் அனுபவம் நம் வயது இருக்காது. ஆனால் குழந்தைகள் முதல் பெரியோர் வரை, அனைவரையும் தோழரே என்று கூப்பிடும் அவர், ஒரு எழுத்தாளராய், பேச்சாளராய், சிறந்த அரசியல் வாதியாய், வாதத்திறமை, ஆசிரியர், சிறந்த அரசியல் வாதியாய், மொத்தத்தில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர்.
பல கல்லூரி மாணவர்களுக்கு தூண்டுகோலாய் இருந்தவர். இப்படி பல பட்டங்களை கொண்ட எளிய மனிதர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளை மலைப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் ஆசிரியர்கள். இதனால் ஆரம்பத்தில் இருந்தே இலக்கியத்தில் ஆர்வம் தொற்றிக் கொண்டு இருந்தது. மிக எளிமையான மனிதரான தோழர் பாண்டியன், தனது குடும்பத்திலும் அப்படிதான் இருந்துள்ளார்.
அது எந்தளவுக்கு எனில் தனது மனைவி இறந்தபோது ஒரு முழம் பூ கூட அவள் ஆசைப்பட்ட நேரத்தில் என்னால் வாங்கி கொடுக்க முடியாத நிலையில் நான் இருந்தேன் என்று கூறினார். அப்படி ஒரு மிக எளிமையான மனிதர். இவரின் பேச்சுக்கும், எழுத்துக்கும் ஈர்க்கப்படாத ஆட்களே இல்லை எனலாம். இப்படிப்பட்ட ஒரு மாமனிதர் இரு முறை மக்களவை உறுப்பினராக இருந்தவர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தவர், அக்கட்சியின் மாநில செயலாளாராக மூன்று முறை பதவி வகுத்தவர். சிறந்த பத்திரிக்கையாளாரான இவர், 1962ல் ஜனசக்தியில் எழுத ஆரம்பித்தவர், ஆரம்ப காலத்தில் இவர் எழுதிய சவுக்கடி என்ற புனைப்பெயரில் எழுதிய கட்டுரைகளுக்குக், கட்சி எல்லையைத் தாண்டியும் வாசகர்களுண்டு. சுய கட்சி விமர்சனத்தில் இவரை மிஞ்சிய சமகாலப் பொதுவுடமைவாதி யாருமில்லை எனலாம்.
16 ஆண்டு காலம் ஜனசக்தி ஆசிரியராக இருந்த இவர் 13 சிறு வெளியீடுகள், 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இத்தகைய மனிதர் தொழிலாளர்களுக்காகவும், விவசாயத்திற்காகவும் குரல் கொடுப்பவர். சென்னை துறைமுகத்தில் தினக்கூலித் தொழிலாளர்கள் 58 பேர் நீதிமன்றத்தை நாடி, 1992ல் பணி நிரந்தர உத்தரவு பெற்றனர். அதை ஏற்காமல் அப்போதைய இயக்குநர் மேல்முறையீடு செய்ததால், அதைக் கண்டித்து காலவரையறையற்ற உண்ணாவிரதம் இருந்தவர். சில தொழிற்சங்கங்களுக்கும் தலைவராக இருந்தவர்.
தொழில் துறைக்கு தரும் முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கும் தர வேண்டும் என்று கூறியவர். ஒரு முறை விவசாய சங்க மாநாட்டில் பேசியவர், விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் உணவு பொருள் பற்றாக்குறை நீங்கும். தொழில் துறையில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு விலை அதிகமாக உள்ளது. ஆனால் விவசாய பொருட்கள் விலை குறைவாக உள்ளது.
விவசாயிகளுக்கு போதிய விலை கொடுப்பதில்லை. மத்திய மாநில அரசுகள் உணவு பற்றாக்குறையை தவிர்க்க விவசாயத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். முன்னுரிமை தர வேண்டும் என்று கூறியவர்.
இப்படி கடைசி வரை ஏழை எளிய மக்களுக்காக குரல் கொடுத்த தா பாண்டியன் இம்மண்ணுலகில் இல்லை, தனது குரலை இத்துடன் போதும் என நிறுத்திக் கொண்டுள்ளார்.