தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பு; அதிர்ச்சி தகவல்
27 Feb,2021
இந்தியாவில் சமீப காலங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. எனினும், கொரோனா வழிகாட்டு விதிமுறைகள் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
பொதுமக்கள் அவற்றை முறையாக பின்பற்றும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது. குளிர்காலம் நிறைவடையும் தருணத்தில் நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. மறுபுறம் கொரோனா தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் மராட்டியம், கேரளா, பஞ்சாப், கர்நாடகம், தமிழகம் மற்றும் குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உள்ளன என தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் மொத்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை இன்று 1,59,590 ஆக உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடும்பொழுது, இது 1.44 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இதுதவிர கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 16,488 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் 85.75 சதவீத பாதிப்புகள் 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இவற்றில், மராட்டியம் (8,333) முதல் இடத்திலும், அதனை தொடர்ந்து கேரளா (3,671) 2வது இடத்திலும் உள்ளது. பஞ்சாப்பில் 622 பாதிப்புகள் உள்ளன. இன்று காலை 7 மணி நிலவரப்படி 1,42,42,547 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.