வெறுங்கையால் கழிவுகளை அள்ள வைத்த கொடுமை: கர்நாடகாவில் துப்புரவுத் தொழிலாளி தற்கொலை
24 Feb,2021
கர்நாடகா மாநிலத்தில் உள்ள மத்தூரில் நாராயணா என்ற 37 வயது துப்புரவுத் தொழிலாளி செவ்வாயன்று தற்கொலை செய்து கொண்டார். 3 மாதங்களுக்கு முன்பாக அவரை பாதாள சாக்கடையை வெறுங்கையால் அள்ள வைத்ததே காரணம் என்று அவர் தன் தற்கொலைக் குறிப்பில் குற்றம்சாட்டியுள்ளார்.
இதோடு மட்டுமல்லாமல் தான் சுயவிருப்பத்துடன் தான் வெறுங்கையுடன் சென்றதாகவும் வேண்டுமென்றேதான் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சென்றதாகவும் அவரைக் கூறச் சொல்லி அதிகாரிகள் மிரட்டல்களையும் விடுத்துள்ளனர். இதையும் அவர் தன் தற்கொலைக் குறிப்பில் கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் 2-ம் தேதி பாதாளச் சாக்கடையைத் திறந்து வெறுங்கையால் கழிவுகளை அள்ள வைக்கப்பட்டுள்ளார். அது அப்போது தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று பிரச்சனையாக நாராயணனை அழைத்து தான் அப்படித்தான் சென்றதாகவும் தானே வெறுங்கையில் அள்ளியதாகவும் கூறுமாறு அதிகாரிகள் அவரை ‘டார்ச்சர்’ செய்துள்ளனர்.
முகக்கவசம், கையுறை என்று பாதுகாப்பு கவசங்கள் எதையும் அளிக்காமல் வெறுங்கையுடன் அவரை அள்ள வைத்ததற்கு அதிகாரிகளே காரணம். இதனையடுத்து அதிகாரிகள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும் நாராயணனை ஒப்புக் கொள்ளச் செய்வதற்காக அவரை சில்லரைக் காரணங்களுக்காக இடைநீக்கம் செய்து அவரது சம்பளத்தையும் பிடித்து வைத்துள்ளனர் என்று நாராயணாவின் சக ஊழியர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட நாராயணாவுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் இருக்கின்றனர்.
நாராயணாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அங்குள்ள துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சுரேஷ் குமார் என்ற அதிகாரி மீது நாராயணா குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார் அவரோடு சுகாதார அதிகாரி காசிம் கானையும் குறிப்பிட்டுள்ளார் நாராயணா.
இதனையடுத்து மாண்ட்யாவில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் பிப்ரவரி 26ம்தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். போலீசார் முழு விசாரணை நடத்தவில்லை எனில் காலவரையற்ற போராட்டம் தொடரும் என்று அவர்கள் கோபாவேசத்துடன் அறிவித்துள்ளனர்.
அதிகாரிகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் மனைவி 3 குழந்தைகளை அநாதையாக்கி விட்டு நாராயணா இந்த அவல முடிவுக்கு வந்திருக்க மாட்டார் என்று சமூக ஆர்வலர்கள் கர்நாடகாவில் வேதனை தெரிவித்தனர்.
கர்நாடகாவில் எடியூரப்பா தலைமை பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.