இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 13 ஆயிரத்து 980 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 11,005,071 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10,697,014 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன் 1 இலட்சத்து 51 ஆயிரத்து 639 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற நிலையில் இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் நேற்று ஒரேநாளில் 79 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளோரின் மொத்த எண்ணிக்கை 1 இலட்சத்து 56 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ்: பரிசோதனைகளை அதிகரிக்குமாறு உத்தரவு!
இந்தியாவின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கேரளா, மராட்டியம், சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் ஆர்.டி.பி.சி.ஆர். முறை பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு கூறியுள்ளது.
நாட்டில் தற்போதுள்ள மொத்த கொரோனா நோயாளிகளில் 74 சதவீதம் பேர் கேரளா மற்றும் மராட்டியம் மாநிலத்தில் உள்ளனர். தற்போது நாடு முழுவதும் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கேரளாவில் வாராந்திர கணக்குப்படி 13.8 சதவீதம் வரை நோய் பரவல் அதிகரித்து இருக்கிறது. மும்பை புறநகர் பகுதி நாக்பூர், அமராவதி, நாசிக், அகோலா, யவத்மால் ஆகிய பகுதிகளில் நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவேதான் மத்திய அரசு கொரோனா பரி சோதனைகளை அதிகப்படுத்துவதன் மூலம் முன்கூட்டியே நோயை கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.