நாசாவின் செவ்வாய் ஆராய்ச்சிப் பயணத் திட்டத்தை தலைமைதாங்கி வழிநடத்திய இந்திய விஞ்ஞானி!
19 Feb,2021
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ‘பெர்சவரன்ஸ்’ (Perseverance) என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பியுள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் நாசாவின் இந்தப் பயணத்தை வழிநடத்திய பெருமையை இந்திய வம்சாவளி விஞ்ஞானி சுவேதா மோகன் பெற்றுள்ளார்.
செவ்வாய்க் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு இந்த விண்கலம் ஆய்வினை மேற்கொள்ளவுள்ளதுடன் செவ்வாயில் இருந்து மண் மற்றும் கற்களை பூமிக்கு எடுத்துவரவுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலையில் நாசா விஞ்ஞானிகளால் பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பப்பட்ட நிலையில், அது செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதாக நாசா அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆய்வில், இந்தியாவில் பிறந்த நாசா விஞ்ஞானி டாக்டர் சுவேதா மோகனுக்கு மிகப்பெரிய பங்கிருப்பது தெரியவந்துள்ளது.
2013இல் தொடங்கிய இந்தத் திட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சுவாதி ஈடுபட்டு வந்துள்ளார். ஜி.என்.அன்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்த அவர், ரோவர் வாகனம், செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயற்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சுவாதி, தனது முதலாவது வயதில் அமெரிக்காவுக்குச் சென்றதுடன், பள்ளிப் படிப்பின்போது குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என எண்ணியதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், ‘ஸ்டார் டிரெக்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து புதிய உலகங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், விண்வெளி ஆய்வில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
மேலும், நாசாவின் சனிக் கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயணத் திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.