எனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன்: ராகுல்
17 Feb,2021
எனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன். அவர்கள் மீது எந்த கோபமும் இல்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, ராஜிவ் கொலை தொடர்பாக மாணவிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ராகுல் அளித்த பதில் : எனக்கு யார் மீதும் எந்த கோபமோ அல்லது வெறுப்போ இல்லை. அவர்களை நான் மன்னித்து விட்டேன். நான் எனது தந்தையை இழந்து விட்டேன். அது எனக்கு மிகவும் கடினமான நேரம். எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது என தெரிவித்தார்.
பின்னர் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:பல கலாசாரம் பல மொழிகளால் தான் இந்தியா பலமாக உள்ளதாக காங்கிரஸ் நம்புகிறது. கலாசாரம், பண்பாடு மாநில உரிமைகளை காங்கிரஸ் எப்போதும் பாதுகாக்கும். புதுச்சேரியை யாராவது சொந்தமாக்க விரும்பினால் அவர்கள் ஏமாந்து போவார்கள். புதுச்சேரிக்கு வெளியேஇருந்து வந்தவர்களுக்கு, மாநிலம் எப்போதும் சொந்தமாகாது. கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரி அரசை மோடி செயல்பட வில்லை.
நாட்டின் பிரதமராக இருக்கும் மோடிக்கு, புதுச்சேரி மக்களின் உணர்வுகளை மதிக்கவில்லை. மத்திய அரசு கொடுத்த தைரியத்தினால் தான் கிரண்பேடி அதிகாரத்தை கையில் எடுத்தார். புதுச்சேரி மக்களை காப்பாற்ற தர்மயுத்தத்தில் ஈடுபட உள்ளேன். எங்களுக்கு தரும் ஓட்டு, புதுச்சேரி மக்களின் கனவுகளை நிறைவேற்றும். என்னை போன்ற மக்கள் பிரதிநிதிகளை பார்லிமென்டில் பேச அனுமதிப்பதில்லை. தமிழகத்தில் தமிழ் பேச அனுமதிப்பதில்லை. அரசை எதிர்த்து பேசினால், தீவிரவாதி என்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.