இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்? இலங்கை மந்திரி விளக்கம்
14 Feb,2021
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதி சரக்கு முனையத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்பாக இந்தியா-ஜப்பான்-இலங்கை இடையே முத்தரப்பு ஒப்பந்தம் முந்தைய சிறிசேனா ஆட்சியில் (2019-ம் ஆண்டு) கையெழுத்திடப்பட்டது. ஆனால் இது தொடர்பாக துறைமுக ஊழியர் சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சே சமீபத்தில் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.
இந்த நிலையில் மேற்படி ஒப்பந்த பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு இலங்கை நாடாளுமன்றத்தில், துறைமுகத்துறை மந்திரி ரோகிதா அபேகுணவர்தனா பதிலளித்து பேசினார். அப்போது அவர் இந்த பணிகளை எடுத்துக்கொண்டிருந்த இந்திய நிறுவனம், தங்கள் புதிய விதிமுறைகளை ஏற்க மறுத்ததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கேபினட் துணை கமிட்டியானது, புதிய விதிமுறைகளை பரிந்துரைத்தது. அதன்படி நமக்கு சாதகமான ஒரு நிலையில் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்கினோம். ஆனால் நமது விதிமுறைகளை இந்திய நிறுவனம் ஏற்க மறுத்தது. எனவே ஒப்பந்தம் கைவிடப்பட்டது’ என்று கூறினார்.இலங்கை அரசின் இந்த நடவடிக்கை இந்தியா மற்றும் ஜப்பானுக்கு கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.