போர் குற்றம் குறித்து ஐ.நாவில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும் – பல்வேறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை!
12 Feb,2021
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல், இனப்படுகொலை மற்றும் போர்குற்றம் குறித்து ஐ.நா. சபையில் இந்தியா குரல் எழுப்ப வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தமிழர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் இந்தியாவின் பார்வையும் புரிதலும் என்ற கருப்பொருளில் டெல்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தனர். இதன்போதே தொல். திருமாவளவன் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “ பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அவர்களது நிலம் மீண்டும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் “ஈழம் என்ற ஒன்று அழிக்கப்பட்டது ஒரு போர்குற்றமாக பார்க்கக்கூடாது எனவும் மாறாக அதனை திட்டமிட்டு நடத்தப்பட்ட இனபடுகொலை என்றே கருதி அதற்காக ஐ.நா.வில் இந்தியாவின் குரல் ஒலிக்க வேண்டும் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் இதற்காக தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேசுகையில் தமிழர்களுக்காவும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்காகவும் ஈழ தமிழர்களுக்காவும் காங்கிரஸ் கட்சிதான் அதிக நன்மை செய்துள்ளதாகவும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் இலங்கை பயணம் மேற்கொண்டபோது 13வது சட்டத்திருத்தம் குறித்து பேசாதது வருத்தம் அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.