கோவையில் பணி நீக்கம் செய்யப்பட்டதால் மனமுடைந்த தூய்மை பணியாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக, இறப்பதற்கு முன் கைப்பேசியில் வீடியோவாக அவர் அளித்துள்ள வாக்குமூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கோவை நகரில் உள்ள சீதாலட்சுமி அரசு மகப்பேறு மருத்துவமனையில், கடந்த 4 ஆண்டுகளாக ரங்கசாமி நிரந்தர தூய்மை பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இவர் தனது மனைவி மற்றும் மகள்களுடன் பி.கே.புதூர் பகுதியில் வசித்து வந்துள்ளார். புதன்கிழமை அன்று பிற்பகலில் தனியாக வீட்டில் இருந்தவர், எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது கைப்பேசியில் இறப்பதற்கு முன் பதிவு செய்த வீடியோ வாக்குமூலத்தை குடும்ப உறுப்பினர்களுக்கும் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோ பதிவில், “எனது இறப்புக்கு காரணம் என் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி, வேலையிலிருந்து நீக்க முயற்சி செய்யும் மூவர்தான்” என தெரிவித்துள்ளார்.
“நான் வேலை செய்யும் இடத்தில் பணிபுரியும் இருவர் தனி அறையில் நெருக்கமாக இருப்பதை நான் பார்த்துவிட்டேன்.
இதனால், என் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வேலையைவிட்டு நீக்க முயற்சிக்கின்றனர். இதற்கு அங்கு பணிபுரியும் மற்றொரு ஊழியரும் துனை போகிறார்.”
காவல் நிலையத்தில் புகார் அளித்த ரங்கசாமியின் குடும்பம்
“மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களை ஆபாசமாக படம் பிடித்ததாக என் மீது பொய்யான குற்றம் சுமத்தியுள்ளனர்.
அங்கு பணிபுரியும் மற்ற ஊழியர்களிடம் என்னைப் பற்றி விசாரித்து பாருங்கள். எந்த ஆதாரங்களுமின்றி என் மீது பொய்யான புகார்களை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டால் எனக்கு வேலை பரிபோகும் நிலை உருவாகியுள்ளது. இப்படி ஒரு பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்தினால் எனது மகள்கள் மற்றும் குடும்பத்தினரோடு எப்படி என்னால் வாழ முடியும்.
எனவே, நான் தற்கொலை செய்துகொள்கிறேன். எனது இறப்புக்கு காரணம் அந்த மூன்று ஊழியர்கள்தான்” என வீடியோ பதிவில் ரங்கசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து குனியமுத்தூர் காவல்நிலையத்தில் ரங்கசாமியின் மகள் புகார் அளித்துள்ளார். இன்று காலை உறவினர்களோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர், எனது தந்தை தற்கொலை செய்துகொள்ள காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
“எனது தந்தை கடந்த இருபது நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்தார். எந்த தப்பும் செய்யாமலே, தன்னை வேலைக்கு அனுமதிக்க மறுக்கின்றனர் என யோசித்துக்கொண்டே இருப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டை தன் மீது சுமத்தியதால் மனமுடைந்து எலி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார்.
அவர் மயக்க நிலைக்கு செல்லும் முன்னர் வாக்குமூல வீடியோ பதிவை அனைவருக்கும் அனுப்பியுள்ளதாக கூறினார். உயிரிழந்து மூன்று நாட்கள் ஆன பின்னரும் நகர சுகாதார அதிகாரியும், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்” என கூறுகிறார் ரங்கசாமியின் மகள்.
இச்சம்பவம் குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிந்துகொள்ள கோவை மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, ‘ரங்கசாமி மீது ஏற்கனவே அங்கு பணிபுரியும் ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர்.
அதனால் தான் அவருக்கு வேலை மறுக்கப்பட்டு வந்தது. அவர் தற்கொலை செய்தது குறித்து காவல்துறையினரின் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என தெரிவித்தனர்.
தற்கொலை செய்துகொண்ட ரங்கசாமியின் கைப்பேசி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்