ஐந்தில் ஒரு இந்தியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு: ஐசிஎம்ஆர் ஆய்வு
06 Feb,2021
இந்தியாவின் வயது வந்த (18 வயதிற்கு மேற்பட்டவர்கள்) மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர், கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக, சமீபத்திய தேசிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
18 வயதுக்கும் மேற்பட்ட சுமார் 28,589 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 21.4 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று வந்து போயிருப்பது தெரிய வந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகிறது.
எனினும், இன்னும் இந்திய மக்கள் தொகையில் பெருமளவு பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்படும் விளிம்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கும் முன்பு அதாவது, டிசம்பர் 17 முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
தடுப்பூசி திட்டத்தில் முதல் சுற்றில் இந்தியாவின் முன்களப் பணியாளர்களுக்கு இதுவரை சுமார் 4.5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன.அமெரிக்காவுக்கு அடுத்து, கொரோனாவால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருக்கிறது. இங்கு ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், சமீப வாரங்களில் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
10 - 17 வயதுடைவர்களில் 25.3 சதவீதம் பேருக்கு உடலில் கோவிட் தொற்றுக்கு எதிரான ஆண்டி பாடீஸ் இருப்பது இந்த தேசிய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக கடந்த வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஐசிஎம்ஆர் அமைப்பின் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா தெரிவித்தார்.
கோவிட்டுக்கு எதிரான ஆண்டி பாடீஸ், சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் சுமார் 25.7 சதவீதம் பேருக்கு உடலில் கோவிட்டுக்கு எதிராக எதிர்ப்பு சக்தி இருந்துள்ளது. முக்கியமாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மத்தியில் 26.6 சதவீதமும், சுகாதார நிர்வாக பணியாளர்கள் மத்தியில் 24.9 சதவீதமும் இருந்துள்ளது.
நகர்ப்புறத்தில் உள்ள குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் 31.7 சதவீதம் பேருக்கு கோவிட் ஆண்டி பாடீஸ் இருப்பதும், குடிசையற்ற பகுதிகளில் இருப்பவர்களில் 26.2 சதவீதம் பேருக்கு எதிர்ப்புத்திறனும் இருந்துள்ளது.
தலைநகர் டெல்லியை பொறுத்தவரை அங்கிருக்கும் மக்கள் தொகையில் பாதி பேருக்கு, அதாவது 56.13 சதவீதம் பேருக்கு கோவிட் எதிர்ப்புத் திறன் வளர்ந்துள்ளதாக ஆய்வு குறிப்பிடுகிறது.