பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் சமூக ஊடக கணக்குகள் சரிபார்க்கப்படும்" - புதிய அறிவிப்பால் சர்ச்சை
06 Feb,2021
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு அவர்களின் சமூக ஊடக நடவடிக்கைகளை ஆராய்வதற்கு உத்தராகண்ட் காவல்துறை முடிவு செய்துள்ளதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள உத்தராகண்ட் டிஜிபி அசோக் குமார், சமூக ஊடக தளங்களில் பெருகிவரும் தவறான பயன்பாட்டை நிறுத்த பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் நடத்தை ஆராயப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உத்தராகண்ட் மாநிலத்தின் காவல்துறை இயக்குநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களின் சமூக ஊடக நடத்தைகளை, சரிபார்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக ஆய்வு செய்ய உத்தராகண்ட் காவல்துறை முடிவு செய்திருந்தது.
இந்த முடிவை ஆதரிக்கும் வகையில் பிடிஐ முகமையிடம் பேசிய, உத்தராகண்ட் டிஜிபி அசோக் குமார், சமூக ஊடக தளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை தேவை என்று கூறினார். மேலும், பாஸ்போர்ட் சட்டத்தில் ஏற்கனவே உள்ள ஒரு விதிமுறையை அமல்படுத்துவதற்கு ஆதரவாக மட்டுமே பேசியதாகக் கூறிய அவர், "புதிய அல்லது கடுமையான" விதிமுறை எதையும் அறிமுகப்படுத்தவில்லை என்று மேலும் கூறினார்.