இந்தியாவுக்கு ரூ.3000 கோடி திரும்பத் தந்தது இலங்கை
06 Feb,2021
:இலங்கை அரசு இந்தியாவிடம் டாலர் மதிப்பில் வாங்கிய 3000 கோடி ரூபாயை திரும்பக் கொடுத்துள்ளது.கடந்த ஆண்டு ஜூலையில் 'சார்க் கரன்சி பரிமாற்றம்' ஒப்பந்தப்படி இலங்கை மத்திய வங்கி இந்திய ரிசர்வ் வங்கியிடம் 3000 கோடி ரூபாய் மதிப்பிலான டாலரை கடனாக பெற்றது.
மூன்று மாத காலத்தில் திரும்பத் தரும் நிபந்தனையுடன் வழங்கப்பட்ட இக்கடன் இலங்கை அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் திரும்பத் தரும் காலம் இரு முறை நீட்டிக்கப்பட்டது. அதன்படி பிப்.1ம் தேதி 3000 கோடி ரூபாய் மதிப்பிலான டாலர் ரிசர்வ் வங்கியிடம் திரும்பத் தரப்பட்டதாக இலங்கை துாதரகம் தெரிவித்துள்ளது.
இக் கடனை திரும்பத் தருமாறு இந்தியா வலியுறுத்தியதாக ஊடகங்களில் வெளியான தகவலை இலங்கை துாதரகம் மறுத்துள்ளது. சர்வதேச விதிமுறைகள் மற்றும் பரஸ்பர உறுதி மொழிப்படி இந்தியா நடந்து கொண்டதாக இலங்கை துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.