‘எச்1 பி' விசா வழங்குவதற்கான தற்போதைய நடைமுறை இந்த ஆண்டு இறுதி வரை தொடரும் - ஜோ பைடன் அறிவிப்பு
06 Feb,2021
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர்.
ஆண்டுக்கு 85 ஆயிரம் எச்1 பி விசா வழங்கப்படுகிறது. இதற்கு 2.25 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, குலுக்கல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விசா வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தனது பதவியின் கடைசி காலத்தில் கடந்த மாதம் 7-ம் தேதி ‘எச்1 பி' விசா நடைமுறையில் குலுக்கல் முறையை மாற்றி, விண்ணப்பிப்போரின் தகுதிக்கேற்ப மதிப்பெண் அடிப்படையில், விசா வழங்குவதற்கான நிர்வாக உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு வரும் மார்ச் 9-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இருந்தது.
இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் ‘எச்1 பி' விசா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கையை தாமதப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதாவது எச்1 பி விசா வழங்குவதில் இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை குலுக்கல் முறையே தொடரும் என ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.