13வது சட்டப் பிரிவு இந்தியா வலியுறுத்தல்
04 Feb,2021
நம் அண்டை நாடான இலங்கையில், தமிழர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும், அந்த நாட்டின் அரசியல் சாசனத்தின், 13வது பிரிவை செயல்படுத்த வேண்டும் என, இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில், தமிழர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும், மாகாண கவுன்சில்கள் அமைக்கவும் வழி செய்யும் வகையில், அரசியல் சாசனத்தின், 13வது சட்டப் பிரிவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. கடந்த, 1987ல் இந்தியா - இலங்கை இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இது செய்யப்பட்டது.
ஆனால், இந்த சட்டப் பிரிவை செயல்படுத்துவதற்கு, சிங்கள தேசியவாத கட்சியும், விடுதலைப் புலிகள் அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில், இலங்கைக்கான இந்தியத் தூதர், வினோத் ஜேக்கப், கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவசேனதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் எம்.பி.,யான விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
அப்போது, 13வது சட்டப் பிரிவை முழுமையாக செயல்படுத்த, அவர் வலியுறுத்தியுள்ளதாக, இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.இந்த சட்டப் பிரிவை நீக்குவதற்கு, அதிபர், கோத்தபய ராஜபக்சே தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதையடுத்து, இந்த சந்திப்பு நடந்ததாக தெரிகிறது.