கொரோனா பெருந்தொற்று கடந்த 2020 ஜனவரியில்சீனாவில் இருந்து பரவத்தொடங்கி உலகம் முழுவதையும் ஆட்கொண்டு, அன்றாட வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்தது.தற்போது நாம் தொற்றின் தாக்கத்தில் இருந்து விடுபட்டிருக்கிறோம்.
இரண்டாம் அலையாக கொரோனா தொற்றுப்பரவும் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா என்பதே பலரது கேள்வியாக உள்ளது.உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் விஷயங்களை வைத்து புள்ளியியல் விபரங்களை ஒருங்கிணைத்துப் பார்த்தால் சில அனுமானங்களைக் கட்டமைக்க முடியும்.இந்த ஆய்வில் இந்தியா உள்ளிட்ட கொரோனா தொற்று எண்ணிக்கையில் உலகின் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை எடுத்துக்கொண்டேன்அந்த நாடுகளில் முதல் கொரோனா அலை ஏற்படும் போது ஒரு நாளில் மிக அதிகமான மரணங்கள் எப்போது நடந்தன என்பதையும் இரண்டாவது அலையில் மிக அதிகமான மரணங்கள் எந்த நாளில் இருந்து தொடங்கின என்பதையும் குறித்துக் கொண்டு, அதற்கு இடைப்பட்ட மாதங்களை முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் இடையில் உள்ள இடைவெளியாக கணக்கில் எடுத்துக் கொண்டேன்.
ஆய்வு முடிவு
1.️அமெரிக்கா முதல் அலை
இங்கு கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளில் 2000 மரணங்கள் தற்போது ஜனவரி மாதம் 2021ல் ஒரு நாளைக்கு 4000 மரணங்கள்.இடைப்பட்ட காலம் - 8 மாதங்கள்.
2. பிரிட்டன் முதல் அலை
ஏப்ரல் 2020 மாதத்தில் ஒரு நாளைக்கு 1000 மரணங்கள்.ஜனவரி 2021ல் மீண்டும் ஒரு நாளைக்கு 1000 மரணங்கள்இடைவெளி - 8 மாதங்கள்
இடைப்பட்ட ஜூலை, ஆகஸ்ட் , செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் அடுத்த அலைக்கான எந்த அறிகுறியும் தோன்றியிருக்கவில்லை
3. ரஷ்யா
கடந்த மே 2020 மாதம் முதல் அலையில் ஒரு நாளைக்கு 250மரணங்கள் மேல் பதிவாகின. தற்போது ஜனவரி 2021 இரண்டாம் அலையில் ஒரு நாளைக்கு 500+மரணங்கள்.ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரை தாக்கம் குறைவு.
4.பிரேசில்
(இந்தியாவுடன் நிகர் சமமாக ஒப்பிடப்படும் நாடு)
இங்கு கடந்த மே 2020ல் ஒரு நாளைக்கு 1500 மரணங்கள்.ஜூன் முதல் டிசம்பர் வரை - 7 மாதங்கள் எந்த பெரிய அலையும் வீசவில்லைதற்போது ஜனவரி 2021 ஒரு நாளைக்கு மீண்டும் 1500 மரணங்கள்.
5. பிரான்ஸ்
முதல் அலையில் கடந்த மே 2020 ஒரு நாளைக்கு ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்து வந்தன. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் , நவம்பர் ஆகிய மாதங்களில் மரணங்கள் வெகுவாக குறைந்தனஆனால் தற்போது டிசம்பர் இறுதி முதல் எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாளைக்கு ஆயிரம் மரணங்கள் நிகழத் தொடங்கியிருக்கின்றன.
6. ஸ்பெயின்
முதல் அலை ஏப்ரல் 2020 மாதத்தில் வீசிய போது ஒரு நாளைக்கு ஆயிரம் மரணங்கள்.பிறகு எட்டு மாதங்கள் ஒரு நாளைக்கு ஒரு இலக்கத்தில் மரணங்கள்.தற்போது ஜனவரி2021ல் ஒரு நாளைக்கு 500 மரணங்கள்.
7. இத்தாலி
முதல் அலை ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளைக்கு ஆயிரம் மரணங்களுக்கு மேல் தொட்டது. ஏழு மாதங்கள் பெரிய தாக்கமின்றி அமைதி நிலவியதுஅதிலும் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபரில் மரணங்கள் வெகுவாக குறைந்தன.ஆனால் டிசம்பர் 2020 மீண்டும் ஒரு நாளைக்கு மரணங்கள் ஆயிரத்தை தொட்டு நிற்கின்றன.
8. துருக்கி
ஏப்ரல் 2020 மாதத்தில் ஒரு நாளைக்கு நூறு மரணங்கள் நிகழ்ந்து வந்ததே முதல் அலையில் அதிகபட்சம்.அடுத்த எட்டு மாதங்கள் அமைதி.தற்போது ஜனவரி 2021 ஒருநாளைக்கு 250 க்கும் மேல் மரணங்கள்.
9. ஜெர்மனி
முதல் அலை ஏப்ரல் 2020 மாதத்தில் ஒரு நாளைக்கு 250 மரணங்கள்.ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பரில் மரணங்கள் குறைந்தன.ஆனால் ஜனவரி 2021ல் ஒரு நாளைக்கு ஆயிரம் மரணங்கள்.
10. இந்தியா
இந்தியாவில் முதல் அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது செப்டம்பர் மாதம் 2020ல் ஒரு நாளைக்கு ஆயிரம் மரணங்களுக்கு மேல் பதிவாகினஅதற்குப்பிறகு ஏனைய நாடுகளில் மரணங்கள் குறைந்திருப்பது போலவே குறைந்து தற்போது ஜனவரி மாதம் மிகவும் குறைவான அளவில் மரணங்கள் பதிவாகின்றன.
மேற்கண்ட நாடுகளில் கொரோனா தொற்று கடைபிடித்த அதே முறை தொடருமானால் தொற்று மரணங்கள் உச்சத்தில் இருந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து எட்டு மாதங்கள் என்று வைத்தால் ஏப்ரல் கடைசி, மே, ஜூனில் மீண்டும் தொற்றினால் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதை புள்ளியியல் விபரங்கள் உறுதி செய்கின்றன.
ஒருவேளை வெயில் காலம் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தினால் 2020 வருடம் எப்படி குளிர்காலங்களில் முதல் அலை அடித்ததோ அதைப்போன்று 2021ல் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் வரை கூட இரண்டாம் அலை தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளது.
மேற்சொன்னவை அனுமானங்களே. இந்த அனுமானங்கள் பொய்யாகிப்போகட்டும் என்றே விரும்புவோம். இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு பெரிய அளவில் இருக்கும். அடுத்த ஆறு மாதத்துக்குள் முப்பது கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் சுகாதாரத்துறையின் முனைப்பும் எனது இந்தக் கணிப்போடு ஒத்துப்போகின்றது.ஆகவே கோவிட் நோய் குறித்த அலட்சியம் வேண்டாம்.தொடர்ந்து வெளியிடங்களில் முகக்கவசம் அணியுங்கள்.அத்தியாவசியத் தேவையின்றி முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது சிறந்தது. தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே கோவிட் பரிசோதனை செய்து கொள்ளவும்.தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள்.முன்களப்பணியாளர்கள், முதியோர்கள் தடுப்பூசி மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது நல்லது.நம்மையும் காத்து நம்மைச் சார்ந்தோரையும் காப்பது நமது கடமை.இரண்டாம் அலை குறித்த இந்த எச்சரிக்கை மணி உள்ளுக்குள் அடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.