இந்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் - அமெரிக்கா கருத்து
04 Feb,2021
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் 2 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 26-ந்தேதி டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது.
இதைத்தொடர்ந்தும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், போராட்டக்களங்களை சுற்றி போலீசார் தடுப்பு வேலிகள், தற்காலிக சுவர்கள் அமைத்து கோட்டை போல மாற்றி உள்ளனர். மேலும் வன்முறை நிகழ்வுகளை தடுக்க மத்திய அரசு அங்கு இணையதள துண்டிப்பும் செய்திருந்தது.
நாட்டின் தலைநகரில் நடந்து வரும் இந்த போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பி வரும் நிலையில், தற்போது சர்வதேச அளவிலும் கவனம் பெற்று உள்ளது.
இந்த போராட்டத்துக்கு பருவநிலை மாற்ற ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என பல்வேறு சர்வதேச பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தநிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்தவொரு வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாகும் என்பதை வாஷிங்டன் அங்கீகரிக்கிறது என்றும் இந்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைதியான போராட்டங்கள் வெற்றிகரமான ஜனநாயகத்தின் அடையாளம் என்றும் இந்திய சந்தைகளில் அதிகரிக்கப்படும் தனியார் முதலீட்டை வரவேற்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.