சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் குறித்த பேச்சுகள் அதிகரித்திருக்கின்றன.
` நான் எம்.ஜி.ஆரின் நீட்சி' என்கிறார் கமல்ஹாசன். `பெரியப்பா ஸ்தானத்தில் இருந்து எனக்கு அறிவுரை கூறினார் எம்.ஜி.ஆர்' என்கிறார் ஸ்டாலின். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் எம்.ஜி.ஆர் பிம்பத்தை இவர்கள் பயன்படுத்துவது ஏன்? என்பதை பின்னோக்கிப் பார்க்கலாம்.
தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் நெருங்கும்போதெல்லாம் பட்டிதொட்டியெங்கும் எம்.ஜி.ஆர் பாடல்களை ஒலிக்கவிடுவது அதிமுக தொண்டர்களின் வழக்கம். இதுதவிர, எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான ஜனவரி 17 அன்றும் அவரது நினைவு நாளான டிசம்பர் 24 அன்றும் எம்.ஜி.ஆர் பட பாடல்கள் தமிழக பட்டி, தொட்டிகளிலும் நகர வீதிகளிலும் எதிரொலிக்கும். இதன்பிறகு எம்.ஜி.ஆர் புகழ்பாடும் வேலைகளை அதிமுக நிர்வாகிகள் யாரும் மேற்கொள்வதில்லை. அதிலும், அண்மைக்காலமாக அ.தி.மு.கவினர் வெளியிடும் விளம்பரங்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் மட்டுமே இடம் பெற்றிருப்பது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக தேர்தல் களத்தில் அதிமுகவை தவிர்த்து பிற கட்சிகள் எம்.ஜி.ஆருக்கு உரிமை கொண்டாடுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை விஜயகாந்த் தொடங்கியபோது, தன்னை `கருப்பு எம்.ஜி.ஆர்' என அவர் உருவகப்படுத்திக் கொண்டார். `உதவி செய்யும் குணம்'; `நடிகர் சங்கத் தலைவராக நல்ல நிர்வாகத்தைக் காட்டியது' உள்ளிட்டவை அவருக்கு பிளஸ் ஆக அமைந்தன.
இதன் காரணமாக 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 8.4 சதவிகித வாக்குகளைப் பெற்றார் விஜயகாந்த். அதைத்தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அவரது கட்சி 10.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர், கருப்பு எம்.ஜி.ஆர் பிம்பத்தை தேமுதிக பயன்படுத்திக் கொள்வதைக் கடுமையாக எதிர்த்தனர்.
தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பாஜக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் எம்.ஜி.ஆர் பிம்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் எம்.ஜி.ஆர் புகழைப் பாடுவார் என்பதை அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை.
கடந்த ஜனவரி 31ஆம் தேதி, சென்னை பூந்தமல்லியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், `என்னுடைய சிறு வயதில் ஒரு நாடகம் போட்டேன். அந்த நாடகத்தின் நிறைவு விழாவில் திமுக பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். அப்போது எனக்கு அறிவுரை கூறிப் பேசும்போது, `நான் அப்பா ஸ்தானத்தில் இல்லை. பெரியப்பா ஸ்தானத்தில் இருந்து உனக்கு அறிவுரை கூறுகிறேன். நீ இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு படிப்பில் கவனத்தை செலுத்து. நீ நன்றாகப் படித்து முன்னேறி வர வேண்டும். உன்னுடைய பணிகள் எல்லாம் பாராட்டுக்குரியவை' என்றார். அந்தச் சம்பவம் இன்றும் பசுமையாக என்னுடைய நினைவில் உள்ளது. இதை ஏன் சொல்கிறேன் என்றால், இப்போது எம்.ஜி.ஆரை பற்றி முதல்வர் பழனிசாமி பேசிக் கொண்டு வருகிறார். அவர் என்றைக்காவது எம்.ஜி.ஆர் முகத்தைப் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறாரா? எம்.ஜி.ஆர் குறித்து ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறாரா? எனச் சாடினார்.அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தே அரசியல் செய்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திடீரென எம்.ஜி.ஆரை `பெரியப்பா' என உரிமை கொண்டாடியதை அ.தி.மு.கவினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ` இதே பெரியப்பாவை கட்சியில் இருந்து தூக்கியெறியும்போது தனது அப்பாவிடம் போய், ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என ஸ்டாலின் கேட்டாரா... பெரியப்பா கட்சி தொடங்கும்போது வந்தாரா?' என விமர்சித்தார்.
``ஸ்டாலினின் `பெரியப்பா எம்.ஜி.ஆர்' முழக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?" என தமிழக திட்டக்குழு துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். ``ஸ்டாலினுக்கு எம்.ஜி.ஆர் அறிவுரை கூறியிருக்கிறார் என்றால் அறிவுரை பெறக்கூடிய அளவுக்கு அந்த நாட்களில் ஸ்டாலினிடம் குறைகள் இருந்துள்ளன என்று அவரே ஒப்புக்கொள்கிறார் என்றுதானே பொருள். ஸ்டாலினுக்கு அறிவுரை கூறிய எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, அம்மாவால் வளர்க்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியாலும் பன்னீர்செல்வத்தாலும் கட்டிக் காக்கப்பட்டு வரும் அதிமுக, என்றைக்கும் மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவோடு சிந்தித்து செயல்படுத்துகிற இயக்கம் என்பதையும் ஸ்டாலினை ஒப்புக் கொள்வதாகத்தான் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்" என்றார்.
`தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆர் பிம்பத்தைப் பயன்படுத்திக் கொள்வது அதிமுக தொண்டர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தாதா?' என்று கேட்டபோது, ``எம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசிகளாக இருந்து உழன்று இயக்கத்தை வளர்த்தபோது ஸ்டாலினின் அப்பாவும் அவர் கட்சி செய்த அநியாயங்களை எல்லாம் தாங்கிக் கொண்டு இந்த இயக்கத்தை வளர்த்தோம். தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆரையும் தமிழகத்து மக்கள் `எங்கள் வீட்டுப் பிள்ளை' என்று இதயத்தில் ஏந்திக் கொண்டார்கள். அப்படியிருக்கும்போது எம்.ஜி.ஆரை ஒழிக்க நினைத்த உதய சூரியனுக்கா, எங்கள் கட்சித் தொண்டர்கள் ஓட்டுப் போடுவார்கள்? `67இல் உதயசூரியனை ஆட்சிக் கட்டிலுக்குக் கொண்டு வந்ததே எம்.ஜி.ஆர்தான்' என்று நான் சொல்லவில்லை; அண்ணாவே சொன்னார். இந்தத் தகவல் திராவிட நாடு, நம் நாடு ஆகிய பத்திரிகைகளில் வெளியானது. உதயசூரியனை ஆட்சிக்குக் கொண்டு வந்த எம்.ஜி.ஆரையே கட்சியில் இருந்து நீக்கி கடலில் தள்ளியபோது மக்கள் எம்ஜிஆரை அரவணைத்துக் கொண்டார்கள். ஸ்டாலின் என்ன பேசினாலும் அது இரட்டை இலைக்கும் எம்.ஜி.ஆருக்கும் பெருமை சேர்க்கும்விதமாகவே அமையும்" என்கிறார் இயல்பாக.
சி.பொன்னையனின் கருத்து குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, `` தி.மு.க தலைவர் கூறியதை அ.தி.மு.கவினர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. எம்.ஜி.ஆரை முன்வைத்து நாங்கள் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சொல்லப் போனால் எம்.ஜி.ஆர் இருக்கும்போதே 86ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றோம்" என்கிறார்.மேலும், `` தற்போதுள்ள அதிமுக நிர்வாகிகள் எல்லாம் எம்.ஜி.ஆரைப் பற்றித் தெரிந்தவர்கள் கிடையாது. எம்.ஜி.ஆருக்கும் ஸ்டாலினுக்கும் இருந்த தொடர்புகள் எல்லாம் ஆர்.எம்.வீரப்பனுக்கு மட்டுமே தெரியும். எம்.ஜி.ஆர் இருந்தபோதே கட்சித் தேர்தலில் மாவட்ட பிரதிநிதியாக வெற்றி பெற்றவர் ஸ்டாலின். இதெல்லாம் பழைய வரலாறு. அ.தி.மு.கவில் தற்போது உள்ளவர்களுக்கு ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் வரலாறு மட்டுமே தெரியும்.
1967 சட்டமன்றத் தேர்தலின்போது அண்ணாவிடம் சென்று, `எம்.ஜி.ஆருக்கு சீட் கொடுக்க வேண்டாம்' என்றேன். காரணம், `நீங்கள் தேர்தலில் நிற்க வேண்டும்' என எம்.ஜி.ஆரிடம் நான் கேட்டபோது, `தேர்தலில் நிற்க முடியாது; எஸ்.எஸ். ராஜேந்திரனின் நிலை எனக்கும் வர வேண்டுமா?' என்றார்.
இதையெல்லாம் தெரிந்த ஒரே நபர் ஆர்.எம்.வீரப்பன் மட்டுமே. அதன்பிறகு ஆட்சிக்கு வரக்கூடிய சூழல் இருந்ததால், 67 சட்டமன்ற தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் எம்.ஜி.ஆர் போட்டியிட்டார். அவருக்காக டெபாசிட் பணத்தை நான் கட்டினேன்.
1967 தேர்தலில் நான் டெபாசிட் பணம் கட்டியதைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர், 1971இல் நடந்த தேர்தலிலும் நான்தான் பணம் கட்ட வேண்டும் என உறுதியாகக் கூறிவிட்டார். இவையெல்லாம் 71ஆம் ஆண்டு தேர்தல் காலகட்டத்தில் வெளியான நாளிதழ்களைப் பார்த்தால் தெரியும். அன்று சைதாப்பேட்டையில் போட்டியிட்ட குடந்தை ராமலிங்கத்துக்காக மாணவர் பேரவை சார்பில் தேர்தல் வேலை பார்க்கச் சென்றுவிட்டதால், எனக்காக வேட்புமனுத் தாக்கலையே தள்ளி வைத்தார் எம்.ஜி.ஆர். இதெல்லாம் இன்றுள்ள அ.தி.மு.கவினருக்குத் தெரியுமா? அந்த வரிசையில் தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த தொடர்பை மட்டுமே ஸ்டாலின் வெளிப்படுத்தினார். மற்றபடி, இதை தேர்தல் நோக்கில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார்.
ஜெயலலிதா இல்லாத சூழலில், எம்.ஜி.ஆர் பிம்பத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவது வாக்குகளாக மாறுமா என்பது வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிந்து விடும்.