இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு; பெரிய சதி திட்டத்திற்கான
30 Jan,2021
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே 150 மீட்டர் தொலைவில் நேற்று மாலை 5.05 மணியளவில் குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார், 4 கார்களின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்துள்ளன.
இதன் எதிரொலியாக, அப்பகுதியில் உள்ள சாலைகள் மூடப்பட்டன. தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சி.சி.டி.வி. காட்சிகள் ஆராயப்பட்டன. சம்பவம் நடந்த இடத்தில் பகுதியளவு எரிந்த நிலையில் கைக்குட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இஸ்ரேல் தூதரக அதிகாரிக்கான முகவரியிட்டு கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் உள்ள கைரேகை பதிவுகளை தடயவியல் குழு ஆய்வு செய்து வருகிறது.
தொடர்ந்து, எந்தவொரு அசம்பாவித சம்பவமும் ஏற்பட்டு விடாமல் தவிர்க்க அனைத்து விமான நிலையங்கள், அரசு கட்டிடங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்களில் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் டெல்லி, மும்பை, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர கண்காணிப்புடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதல் நடந்த இடம் விஜய் சவுக் பகுதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது. விஜய் சவுக் பகுதியில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்கள் பலர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தனர்.
டெல்லி போலீசின் சிறப்பு படை பிரிவு இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறது. இதில், முதற்கட்ட தகவலின்படி, மக்களிடையே அச்சம் பரவுவதற்கான நோக்கில் தாக்குதல் நடந்துள்ளது. தூதரகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு அம்மோனியம் நைட்ரேட் என்ற ரசாயன பொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் குறைந்த அளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவே ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டு இருக்குமெனில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும். பெரிய சதி திட்டத்திற்கான சோதனையாக இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என டெல்லி போலீஸ் வட்டாரம் தெரிவித்து உள்ளது