அமைதிவழிப் போராட்டத்துக்கு எப்போதும் மதிப்பளிக்க வேண்டும் – அன்டோனியோ குட்டெரெஸ்
28 Jan,2021
அமைதிவழிப் போராட்டத்துக்கு எப்போதும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா்.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்துள்ள நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அமைதிவழிப் போராட்டங்கள், சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கான உரிமை அகிம்சை ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும். இதை நாங்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக டெல்லியில் விவசாயிகள் ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்தனர்.இதற்காக குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்வதற்கு பொலிஸார் நிபந்தனையுடன் அனுமதி அளித்திருந்தனா்.
இந்நிலையில் பேரணிக்கு வந்தவா்கள் அவா்களுக்கு அனுமதி அளித்திருந்த வழித்தடங்களை மீறி செங்கோட்டை, ஐடிஓ, நாங்லோய் உள்ளிட்ட பல இடங்களில் முற்றுகையிட்டதால் பேரணியில் ஈடுபட்டவா்களுக்கும்இ பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பின் அது வன்முறையாக மாறியமை குறிப்பிடத்தக்கது.