4ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா
27 Jan,2021
சொத்து குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்பட்டார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நண்பியும், அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச்செயலாளராகவும் சிறிது காலம் விளங்கிய சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கான சிறைத்தண்டனைக் காலம் நிறைவடையும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்டது என குறிப்பிடப்படுகிறது.
இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு வைத்தியர்கள் மாற்றியுள்ளனர். கொரோனா வழிகாட்டுதல்படி சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா இன்று விடுதலையானார். சிறையில் இருந்து விடுதலையானதற்கான உத்தரவு மருத்துவமனையில் சசிகலாவிடம் வழங்கப்பட்டது.
சிறைவாசம் முடிந்தாலும் சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என அ.ம.மு.க.வினர் அறிவித்துள்ளனர்.