இந்திய – சீன இராணுவத்தினருக்கு இடையில் மீண்டும் மோதல்!
25 Jan,2021
இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இதன்போது, இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதில் சீனத் தரப்பில் 20 வீரர்களும் நான்கு இந்திய வீரர்களும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் இன்று ஈடுபட்டிருந்த போது, சீன வீரர்கள் எல்லையைக் கடக்க முற்பட்டதாக இந்திய இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்காக இந்திய – சீன இராணுவத் தளபதிகள் மட்டத்திலான ஒன்பதாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
எல்லைப் பிரச்சினை : இந்தியா, சீனாவிற்கு இடையே மீண்டும் பேச்சுவார்த்தை!
கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனாவுக்கிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
கிழக்கு லடாக்கில் சீன எல்லைக்கு உள்ளிட்ட மோல்டோ எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், துணைத் தளபதி பிஜிகே மேனன் தலைமையிலான இராணுவ அதிகாரிகள் குழு பங்கேற்றது.
இதன்போது எல்லையில் படைகளை விரைவாக திரும்பப் பெறுவது பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தவிா்ப்பது, அனைத்து உடன்பாடுகளையும் மதித்து நடப்பது, எல்லையில் அமைதியை நிலைநாட்டுதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பா் 8-ஆம் திகதி இரு தரப்பு இராணுவ அதிகாரிகள் அளவிலான 8-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
அப்போது கிழக்கு லடாக் எல்லையில் குறிப்பிட்ட பகுதிகளில் படைகளை திரும்பப் பெறுவது குறித்து இரு நாடுகளும் ஆலோசித்ததும் குறிப்பிடத்தக்கது.