இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16, சனிக்கிழமை தொடங்கி உள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் முதலில் மூன்று கோடி சுகாதார ஊழியர்கள் மற்றும் முன்னணி கள ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கொரோனா நோய்தொற்றால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கோவிட் 19 தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்?
பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறையின்படி, சுகாதாரப் பணியாளர்களுக்கு அதாவது மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் சுகாதார சேவையுடன் தொடர்புடையவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்படும்.
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளையும் சேர்ந்து இவர்களின் எண்ணிக்கை 80 லட்சம் முதல் ஒரு கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இவர்களுக்குப் பிறகு சுமார் இரண்டு கோடி களப்பணியாளர்கள். அதாவது மாநில போலீசார், பாதுகாப்பு படையினர், துணை ராணுவப் படையினர், துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்படும். இதற்குப் பிறகு, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஏதேனும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட 50 வயதிற்குட்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்படும். இந்தியாவில் அத்தகையவர்களின் எண்ணிக்கை 27 கோடி. கொரோனா அறிகுறிகள் உள்ள 50 வயதுக்குக் குறைவானவர்களும் இந்த தடுப்பூசி இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
கோவிட்-19 தொற்று அதிகமாக உள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த முன்னுரிமை பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ள மக்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி போடப்பட்ட பின்னரே மீதமுள்ள மக்களின் முறை வரும்.
இந்தியாவில் எந்த கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன?
கோவிட் -19 சிகிச்சைக்காக இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டி.சி.ஜி.ஐ) அளித்துள்ளது. இந்த இரண்டு தடுப்பூசிகள் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகும்.
கோவிஷீல்டை, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனிகா இணைந்து தயாரித்துள்ளன. ஆனால் கோவேக்சின் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பு தடுப்பூசி ஆகும். இது ' உள்நாட்டு (சுதேசி) தடுப்பூசி' என்றும் அழைக்கப்படுகிறது.
கோவிஷீல்டு இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. தற்போது 1 கோடியே 10 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அரசு கொள்முதல் செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .
அதே நேரத்தில், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) உடன் இணைந்து கோவேக்சின் தயாரிக்கிறது.
மொத்தம் 55 லட்சம் டோஸ் கோவேக்சின் இதுவரை வாங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு எப்போது கிடைக்கத் தொடங்கும்?
இந்தியாவில் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க 130 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது.
தடுப்பூசி வழங்கலின் முதல் கள ஒத்திகை ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாவது ஒத்திகை வெள்ளிக்கிழமை அதாவது ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற்றது. இதன் மூலம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசிகள் போடுவதற்கான பூர்வாங்க பயிற்சி செயல்முறை தொடங்கியது.
2021 ஜூலை மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு கோவிட் தடுப்பூசி கொடுப்பதே அரசின் குறிக்கோள். இது 'உலகின் மிகப்பெரிய தடுப்பூசி வழங்கும் திட்டம்' என்றும் சொல்லப்பபடுகிறது.
கோவிட் -19 தடுப்பூசியைப் பெற பதிவு செய்வது எப்படி?
கோவிட் -19 தடுப்பூசிக்கு, அனைத்து மக்களும் இந்திய அரசின் கோவின் செயலியில் (CoWIN App) தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்வது மிகவும் முக்கியம். அது இல்லாமல் தடுப்பூசி வழங்கப்படாது.
இந்த செயலியில் பதிவுசெய்த பிறகு, உங்கள் மொபைலில் ஒரு செய்தி வரும், அதில் தடுப்பூசி போடப்படும் நேரம், தேதி மற்றும் மையத்தின் முழுமையான விவரங்கள் இருக்கும். பதிவு செய்ய, உங்கள் புகைப்பட ஐடிகளில் ஒன்றை உள்ளிட வேண்டும். ஆதார், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், 100 நாள் வேலை அட்டை, வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு பாஸ் புக், எம்.பி / எம்.எல்.ஏ / எம்.எல்.சி வழங்கிய சான்றிதழ் அல்லது ஓய்வூதிய அட்டை அல்லது பணி அடையாள அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையையும் சமர்ப்பிக்கலாம்.
பதிவு செய்யும் நேரத்தில் அளிக்கப்படும் அடையாள அட்டையின் அடிப்படையில் மட்டுமே தடுப்பூசி அளிக்கப்படும். வேறு எந்த அடையாள அட்டையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
தடுப்பூசி இரண்டு கட்டங்களாக வழங்கப்பட இருப்பதால், அடுத்த தேதி எஸ்எம்எஸ் மூலமாக தெரிவிக்கப்படும். இந்த செயலி பற்றிய மிக முக்கியமான தகவல் என்னவென்றால், இந்த அரசு செயலியை பதிவிறக்கம் செய்ய இதுவரை அரசு சொல்லவில்லை. அதாவது சுகாதார அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி இந்த செயலி இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் அதை வெளியிட அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
கோவிட் -19 தடுப்பூசி இலவசமாக கிடைக்குமா?
தடுப்பூசிக்கு எதிரான வதந்திகள் மீது கவனம் செலுத்த வேண்டாம் என்றும் அவை இலவசமாக வழங்கப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.
இருப்பினும், இலவச வழங்கல் அல்லது தடுப்பூசியின் விலை குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் அதன் பின்னர் வெளியிடப்படவில்லை. முன்னதாக, கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை குறித்து சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனாவாலா குறிப்பிடுகையில், இந்தியாவில் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு 200 முதல் 300 ரூபாய் வரை அரசு கொடுக்க வேண்டியிருக்கும் என்று கூறினார் .
அதாவது தனது தடுப்பூசி கூட்டாளிகளான ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனிகா, சர்வதேச சந்தையில் கோவிஷீல்டு தடுப்பூசியை விற்கும் அதே விலையில் (ஒரு டோஸுக்கு 3 அமெரிக்க டாலர்) சீரம் நிறுவனம் அதை இந்திய அரசுக்கு அளிக்கிறது.
இந்தியாவில், கொரோனா தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளிலும் கிடைக்கச்செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் இங்கு இதன் விலை இருமடங்காக இருக்கக்கூடும்.
பாரத் பயோடெக் 16.5 லட்சம் டோஸை இலவசமாக வழங்குவதாகக் கூறியுள்ளது. " ஒரு சிறப்பு நடவடிக்கையாக பிபிஐஎல், கோவேக்சின் தடுப்பூசியின் 16.5 லட்சம் டோஸ்களை மத்திய அரசுக்கு இலவசமாக வழங்கும்," என்று மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் கூறினார்.
"மீதமுள்ள 38.5 லட்சம் டோஸ்களுக்கு பாரத் பயோடெக் , ஒரு டோஸுக்கு 295 ரூபாயை அரசிடமிருந்து பெறுகிறது," என்று சுகாதார அமைச்சகம் மேலும் கூறியது. இருப்பினும், மொத்த கொள்முதல் 55 லட்சம் டோஸ் என்ற நிலையில் இதை கணக்கில் கொண்டு பார்க்கும்போது ஒரு டோஸின் விலை 206 ரூபாய் மட்டுமே.
"எங்கள் தடுப்பூசி விலைகள் மூன்று பிரிவுகளாக இருக்கும் - வளர்ந்த நாடுகளுக்கு, நடுத்தர வருமான நாடுகளுக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற குறைந்த வருமானம் உள்ள சில நாடுகளுக்கு என்பது போல, " என்று அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதில் முன்னோடியாக இருக்கும் ஃபைசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட அனைத்து தடுப்பூசிகளின் பாதுகாப்பு அறிக்கையும் சரியாகவே உள்ளதாக பெரும்பாலான நிபுணர்கள் கருதுகின்றனர்.
தடுப்பூசிகள் காரணமாக லேசான காய்ச்சல் இருக்கலாம் ஊசி போடும் இடத்தில் வலி அல்லது தலைவலி இருக்கலாம். ஒரு தடுப்பூசி 50 சதவிகிதம் வரை பயனுள்ளதாக இருந்தால் அது வெற்றிகரமான தடுப்பூசி என்ற பிரிவில் வைக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தடுப்பூசியைப் பயன்படுத்துபவர் தங்கள் உடல்நலத்தில் ஏற்படும் ஏதேனும் சிறிய மாற்றங்கள் குறித்தும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அத்தகைய மாற்றங்கள் உடனடியாக மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கோவிட் 19 தடுப்பூசி குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா?
பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசி கோவேக்சின், 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியைப் பெற்றுள்ளது. மேலும் இந்த தடுப்பூசியை 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு அளித்து மருத்துவ ரீதியிலான பரிசோதனைகள் செய்யவும் இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதன் கீழ் இந்த தடுப்பூசி வழங்கப்படும் குழந்தைகளின் உடல்நல அறிகுறிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் பலன் எவ்வாறு இருக்கும்?
ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி இந்தியாவுக்கு முன்னால் ஏற்கனவே பிரிட்டன், அர்ஜென்டினா மற்றும் எல் சால்வடாரில் அவசர ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி ஒரு சாதாரண சளி (common cold) அடெனோ வைரஸில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது.
சிம்பன்ஸிகளை பாதிக்கும் இந்த வைரஸில் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூடவே இந்த தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 23,745 பேருக்கு பரிசோதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் கோவேக்சினை , இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் இணைந்து உருவாக்கியுள்ளது. இறந்த கொரோனா வைரஸ் அதன் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இது மக்களுக்கு தீங்கு விளைவிக்காது. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த தடுப்பூசி உடலில் நுழைந்த பிறகு கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. இந்த தடுப்பூசி பலனளிக்கவேண்டுமானால் இரண்டு டோஸ்கள் போட்டுக்கொள்வது கட்டாயமாகும்.
கோவேக்சின் ஒப்புதல் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது ஏன்?
கோவேக்சின் ஒப்புதல் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. தடுப்பூசியின் செயல்திறன் குறித்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. பாரத் பயோடெக்கின் கோவேக்சின் மூன்றாம் கட்ட சோதனை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது மற்றும் செயல்திறன் தரவு இன்னும் கிடைக்கவில்லை.
எந்த தடுப்பூசி எத்தனை பயனுள்ளதாக இருக்கும் என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா தனது தடுப்பூசி குறித்து ஒரு செய்தியாளர் கூட்டத்தை நடத்தினார். அதில் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பல ஆதாரங்களை அளித்து தனது தடுப்பூசியை நியாயப்படுத்த முயன்றார்.
"ஏதோ ஒரு நிறுவனம் கோவேக்சினுக்கு தண்ணீர் என்று பெயர் கொடுத்தது. நான் கொஞ்சம் கோபப்பட்டு பேசினால் மன்னிக்கவும். இது மிகவும் வேதனை அளிக்கிறது. 24 மணிநேரமும் வேலை செய்யும் ஒரு விஞ்ஞானிக்கு இது மன உளைச்சலை அளிக்கிறது. ஏனென்றால் சிலரின் சுயநல காரணங்களுக்காக அவர் இத்தகைய விமர்சனங்களை எதிர்கொள்கிறோம். அது வலிக்கிறது. " என்று அவர் சொன்னார்.
பல அறிவியாலாளர்கள் கோவேக்சின் தடுப்பூசியின் ஒப்புதல் செயல்முறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். "அவை கட்டுப்பாட்டு விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை" என்று அவர்கள் கூறுகின்றனர். " இது தடுப்பூசி பாதுகாப்பை வழங்க சிந்தித்து எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை " என்று கோவேக்சின் தயாரிப்பு பற்றி சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
மேலும் "இந்த தடுப்பூசியைப் பெறும் ஒவ்வொரு நபரும் பின்பற்றப்பட்டு கண்காணிக்கப்படுவார். மேலும் அவர்களின் மருத்துவரீதியான கண்காணிப்பும் தொடரும்" என்றார். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் ரன்தீப் குலேரியாவும் "கோவேக்சின் ஒப்புதல் ஒரு ஆதரவு நடவடிக்கை" என்று விவரித்தார்.
கோவிட் 19 தடுப்பூசி இந்தியாவில் எவ்வாறு சேமிக்கப்பட்டு விநியோகிக்கப்படும்?
உற்பத்தியாளர்களிடமிருந்து தடுப்பூசியை முதலில் நான்கு பெரிய குளிர் சேமிப்பு மையங்களுக்கு (கர்னால், மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா) கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. அங்கிருந்து அவை மாநிலஅரசுகளால் இயக்கப்படும் 37 மையங்களுக்கு அனுப்பப்படும். இந்த தடுப்பூசி இயக்கத்திற்காக நாடு முழுவதும் 29 ஆயிரம் குளிர் சேமிப்பு கிடங்குகளை அரசு தயார் செய்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
இதன் பின்னர் தடுப்பூசி பொருட்கள் மாவட்ட அளவிலான மையங்களுக்கு அனுப்பப்படும். நகரங்கள் முதல் கிராமங்கள் வரை தடுப்பூசி போடும் பணியை முடிக்க சுமார் நாலரை லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தவிர, மற்ற மருந்துகளின் பெயர்கள்:
ZyCoV-D: காடிலா ஹெல்த்கேரின் தயாரிப்பு இது, டி.என்.ஏ முறையில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக காடிலா, உயிரி தொழில்நுட்பத்துறையுடன் இணைந்து பணியாற்றுகிறது. அதன் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகின்றன.
ஸ்பூட்னிக்-V- இது ரஷ்யாவின் கோமாலாயா தேசிய மையத்தால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஆகும், இது மனித அடினோவைரஸ் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. ஹைதராபாத்தின் டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் பெரிய அளவில் இதைத் தயாரிக்கிறது. இந்த தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை எட்டியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த எம்ஐடி தயாரிக்கும் புரோட்டீன் ஆன்டிஜென் அடிப்படையிலான தடுப்பூசி ஹைதராபாத்தின் பயோலாஜிகல் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. அதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மனித மருத்துவப் பரிசோதனைகள் தொடங்கியுள்ளன.
HGCO 19 - அமெரிக்காவைச் சேர்ந்த எச்டிடி( HDT)-யின் எம்ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பூசி புனேவைச் சேர்ந்த ஜெனோவா என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசியின் விலங்குகள் மீதான பரிசோதனைகள் முடிந்துவிட்டன, விரைவில் அதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் தொடங்க உள்ளன.
இந்தியாவின் அரவிந்தோ ஃபார்மா, தற்போது அமெரிக்காவின் ஆரோவாக்சினுடன் இணைந்து ஒரு தடுப்பூசி மருந்தை தயாரித்து வருகிறது. இது தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளது.
இந்தியாவில், இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானோர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு தடுப்பூசி எவ்வாறு தயாரிக்கப்படுகிறது, அதற்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்கப்படுகிறது?
இந்தியா தடுப்பூசி தயாரிக்கும் பெரிய மையமாக நிகழ்கிறது. உலகளவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 60 சதவிகிதத்தை இந்தியா உற்பத்தி செய்கிறது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் இயங்குகிறது, இதன் கீழ் ஆண்டுதோறும் 5.5 கோடி பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு, 39 கோடி தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. எந்தவொரு தடுப்பூசியும் முதலில் ஆய்வகத்திலும் பின்னர் விலங்குகள் மீதும் சோதிக்கப்படுகின்றன.
இதற்குப் பிறகு அவை வெவ்வேறு கட்டங்களில் மனிதர்கள் மீது சோதிக்கப்படுகின்றன. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா, அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துள்ளனவா, அவை சோதனை முறையில் செயல்படுகின்றனவா என்று ஆய்வு செய்யப்படுகின்றது.
பொதுவாக தயாரிக்கப்படும் 3 வகையான தடுப்பூசிகள்:
லைவ் தடுப்பூசி - லைவ் தடுப்பூசிகளில் ஓர் உயிருள்ள வைரஸ் இருக்கும். ஆனால் இந்த வைரஸ்கள் தீங்கு விளைவிப்பதில்லை. அவை நோய்களை ஏற்படுத்தாது. ஆனால் உடலின் உயிரணுக்களுடன் தனது எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை செயலில் வைக்கிறது. இந்த வகை தடுப்பூசியில் நோயின் வைரஸைப் போன்ற மரபணுக் குறியீட்டைக் கொண்ட வைரஸ்கள் உள்ளன மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத மேற்பரப்பு புரதங்கள் உள்ளன. ஒரு நபருக்கு அத்தகைய தடுப்பூசி கொடுக்கப்படும்போது, இந்த 'நல்ல' வைரஸ்கள் மோசமான வைரஸ்களுக்கு எதிராக போராட நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன.
அத்தகைய சூழ்நிலையில், மோசமான வைரஸ் உடலில் நுழையும் போது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, அந்த வைரஸால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது.
இன்னாக்டிவேடட் (செயலிழக்கவைக்கப்பட்ட தொற்றுகளைக் கொண்ட) தடுப்பூசி- இந்த வகை தடுப்பூசியில் பல வைரஸ் புரதங்கள் மற்றும் செயலிழக்கவைக்கப்பட்ட வைரஸ்கள் உள்ளன. நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் "பாத்தோஜென்" அல்லது நோய்கிருமிகள் என்று அழைக்கப்படுகிறது. இன்னாக்டிவேடட் தடுப்பூசிகளில் இறந்த நோய்க்கிருமிகள் உள்ளன. இந்த இறந்த நோய்க்கிருமிகள் உடலுக்குள் செல்வதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது, ஆனால் உடல் அவற்றை ஒரு வெளிப்புற தாக்குதல் என்றே கருதுகிறது.
இதன்காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு அணுக்கள் (ஆன்டிபாடிகள்) உருவாகின்றன. செயலற்ற வைரஸால் நோய்க்கான ஆபத்து இல்லை. அத்தகைய சூழ்நிலையில், உடலில் உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகள் காரணமாக உண்மையான வைரஸ் உடலுக்குள் வந்தாலும் கூட நோய் பரவுவதில்லை. இது மிகவும் நம்பகமான முறை என்று விவரிக்கப்படுகிறது.
மரபணு அடிப்படையிலான தடுப்பூசி - இன்னாக்டிவேடட் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது மரபணு அடிப்படையிலான தடுப்பூசிகளின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இவற்றை விரைவாக தயாரிக்கலாம்.
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் கோடிக்கணக்கான டோஸ்கள் ஒரே நேரத்தில் தேவைப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. . மரபணு அடிப்படையிலான தடுப்பூசிகள், கொரோனா வைரஸ் டி.என்.ஏ அல்லது எம்-ஆர்.என்.ஏவின் முழுமையான மரபணு அமைப்பைக் கொண்டிருக்கும்.
இந்த நோய்க்கிருமிகளிடமிருந்து மரபணு தகவல்களின் முக்கிய கட்டமைப்புகள் நானோ துகள்களாக நிரம்பி உயிரணுக்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இது உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. மேலும் இந்த மரபணு தகவல்களை உயிரணுக்கள் பெறும்போது, அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை செயல்படுத்துகிறது.
இதன் காரணமாக நோய் நீக்கப்படுகிறது. இந்தியாவில் எந்தவொரு தடுப்பூசி தயாரிக்கும் செயல்முறையும் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த தரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.
இதன் அனைத்து கட்டங்களையும், 'இந்திய தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு' மதிப்பாய்வு செய்கிறது. டி.ஜி.சி.ஐ யிடமிருந்து ஒப்புதல் கிடைத்த பின்னர்தான் தடுப்பூசியின் மொத்த உற்பத்தி அனுமதிக்கப்படுகிறது.
தரக் கட்டுப்பாட்டை மனதில் வைத்து, தடுப்பூசியின் மொத்த உற்பத்தியின் தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் தயாரிக்கப்படுகின்றன. தரத்தை பராமரிக்க விஞ்ஞானிகள் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகள் மூலம் அவ்வப்போது சோதனை செய்யப்படுகிறது.