இயேசு அழைக்கிறார்' அமைப்பின் தலைவரும், கிறிஸ்துவ மத போதகருமான பால் தினகரனுக்கு சொந்தமான, 25 இடங்களில் தொடர்ந்து, நான்காவது நாளாக, நேற்றும் சோதனை நடந்தது. இதில், 4.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், வெளிநாடுகளில், பல நுாறு கோடி ரூபாய் முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக, வருமான வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த, தினகரன் என்பவர், 'இயேசு அழைக்கிறார்' என்ற பெயரில், ஒரு அமைப்பை நிறுவி, நிர்வகித்து வந்தார். மதப் பிரசாரம், ஊழியம் செய்வது ஆகியவை, இதன் முக்கிய செயல்பாடுகளாக உள்ளன. அவரது மறைவுக்குப் பின், மகன் பால் தினகரன், இந்த அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்புக்கு, வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. பல்வேறு கல்வி நிறுவனங்களும் செயல்படுகின்றன.
இயேசு அழைக்கிறார் என்ற குழுமத்திற்கு வரும் நிதிக்கு, முறையான கணக்கு இல்லை என்ற தகவல், மத்தியில் தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்தபோதே கண்டறியப்பட்டது. நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது, இங்கே அமைந்திருந்த தி.மு.க., அரசும், தி.மு.க., - எம்.பி., ஒருவரும், தமிழகத்தைச் சேர்ந்த, அப்போதைய மத்திய அமைச்சரும், அதற்கு முட்டுக்கட்டை போட்டனர்.எனவே, அத்திட்டம் கைவிடப்பட்டது. தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்த பின், முறைகேடான வழியில், பல அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி குவிவதை உன்னிப்பாக கவனித்து, நெறிப்படுத்த, மோடி அரசு முற்படத் துவங்கியது. அப்போது தான், இந்த அமைப்பின் நடவடிக்கைகளும் தெரிய வந்தன.கூடவே, முறையாக வரி செலுத்தவில்லை என, வருமான வரித் துறைக்கு புகார்களும் வந்தன.
மேலும், கல்வி நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருவாய் மற்றும் ஜெபக் கூட்டங்களுக்கு, உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நன்கொடைகளை குறைத்துக் காட்டி, வரி ஏய்ப்பு செய்ததாகவும், புகார்கள் வந்தன.இந்த புகாரில், சென்னை, கோவை உட்பட, பால் தினகரனுக்கு சொந்தமான, 25 இடங்களில், வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நான்காவது நாளாக தொடர்ந்த சோதனை, நேற்று காலையில் முடிந்தது. அதில், வெளிநாடுகளில் பல நுாறு கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:இயேசு அழைக்கிறார் அமைப்பில், நான்காவது நாளாக நடந்த சோதனை, நேற்று காலை நிறைவடைந்தது. கோவையில் ஒரு வீட்டில் நடந்த சோதனையில், 4.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், பல நுாறு கோடி வரி ஏய்ப்பு செய்ததற்கான, ஏராளமான ஆவணங்கள் சிக்கின.
மேலும், கணக்கில் காட்டாமல், வெளிநாடுகளில், 120 கோடி ரூபாய்க்கும் அதிமாக, முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சோதனையில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த, அடுத்த வாரம் ஆஜராக வேண்டும் என, பால் தினகரனுக்கு, 'சம்மன்' அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.