கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுள் 447 பேருக்கே பக்க விளைவுகள்
18 Jan,2021
நாடு முழுவதும் இதுவரை 2.24 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாகவும் இதில் 447 பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஜனவரி 17 ஆம் திகதிவரை நாடு முழுவதும் 2 இலட்சத்து 24 ஆயிரத்து 301 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் நாளில் மட்டும் 2 இலட்சத்து 7 ஆயிரத்து 229 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்த 2 நாட்களில் வெறும் 447 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டபின் பக்க விளைவுகள் ஏற்பட்டன. அதில் 3 பேரை மட்டுமே வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மற்ற அனைவருக்கும் லேசான காய்ச்சல், தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சினைகள்தான் ஏற்பட்டன.
இந்த தடுப்பூசி திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைந்து சீரமைப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆய்வு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.