எஸ்400 ஆயுதத்தை வாங்கினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
16 Jan,2021
தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை பெற்ற எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை கொள்முதல் செய்ய கடந்த 2018-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.
இந்திய மதிப்பில் சுமார் 40 ஆயிரம் கோடி ருபாய் மதிப்புக்கு போடப்பட்ட இந்த ஒப்பந்தத்திற்கான முன்பணத்தை இந்தியா , ரஷியாவிடம் செலுத்திவிட்டது.
மீதமுள்ள பணம் செலுத்து நடைமுறைகளும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதத்தின் முதல் தொகுப்பை இந்தியாவிடம் இவ்வாண்டு இறுதிக்குள் ரஷியா வழங்க உள்ளது.
ஆனால், ரஷியாவிடம் இருந்து இந்தியா எஸ்400 ஏவுகணை தடுப்பு ஆயுதம் வாங்குவதை ஆரம்பம் முதலே அமெரிக்கா எதிர்த்து வருகிறது. ஒப்பந்தத்தை இந்தியா கைவிட வேண்டும். இல்லெயேல் இந்தியா பல்வேறு பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் எனவும் இரு நாட்டு உறவில் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்து வருகிறது.
அமெரிக்காவின் அத்தனை எதிர்ப்பையும் மீறி எஸ்400 ஏவுகணை தடுப்பு ஆயுதம் வாங்கியே ஆகவேண்டும் என முடிவில் இருந்து இந்தியா தற்போதுவரை பின்வாங்காமல் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை வாங்கினால் இந்தியா பொருளாதாரத்தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னரும் இதே நிலையே தொடரும் எனவும் எஸ்400 விவகாரத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என அமெரிக்கா இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை இந்தியா வாங்க உள்ள நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத்தடை எச்சரிக்கை இரு நாட்டு உறவு இடையே கடுமையான விரிசலை ஏற்படுத்தும் என கருத்தப்படுகிறது.
இதற்கிடையில், ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை வாங்கிய நேட்டோ உறுப்பு நாடான துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.