தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பம்!
16 Jan,2021
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, மதுரையில் தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தானும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் முதல் நாளில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியுள்ளது. 6 இடங்களில் கோவேக்சின் தடுப்பூசியும், 160 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியும் போடப்படுகிறது.
கோவின் செயலியில் பதிவு செய்து கொண்ட 4.89 லட்சம் பேரில், இரண்டரை லட்சம் பேருக்கு முதலில் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை மதுரையில அரசு ராஜாஜி மருத்துவமனையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அம்மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றுபவரும், மருத்துவர்கள் சங்க மாநில தலைவருமான டொக்டர் செந்தில் முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
தடுப்பூசி திட்டத்தை தொடங்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், கொரோனா தடுப்பூசி பிரதமர் மோடியின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றார்.
நாட்டைப் பாதுகாக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தடுப்பூசி தொடர்பாக ஏற்பட்டுள்ள அச்சம் போகப் போக சரியாகிவிடும் என தெரிவித்த முதலமைச்சர், கொரோனா தடுப்பூசியை தானும் போட்டுக் கொள்ள தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தடுப்பூசி போட்டுக் கொள்வதால் எதிர்ப்பு சக்தி உருவாவதை கண்டுபிடிக்க என்ன அளவுகோல் என செய்தியாளர்கள் கேட்டபோது, தாம் ஒரு மருத்துவர் அல்ல என்றும், முதலில் மருத்துவர்களே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர் என்றும் பதிலளித்தார்.