டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், ‘கிரெடிட் கார்டு’ பயன்பாடும் அதிகரித்து வருகிறது. ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு, கிரெடிட் கார்டு உதவியாக இருக்கிறது; மேலும், உடனடி பணம் தேவைப்படும் போதும் கைகொடுக்கிறது. எனினும், கிரெடிட் கார்டை சரியாக கையாளும் போது மட்டுமே, அதன் மூலம் சிறந்த பலனை பெற முடியும். இல்லை எனில், கடன் வலையில் சிக்க நேரலாம். எனவே, புதிதாக கிரெடிட் கார்டு பெற விரும்புகிறவர்கள், கார்டு பயன்பாடு தொடர்பான முக்கிய அம்சங்களை அறிந்திருப்பது நல்லது.
ஆண்டு கட்டணம்:
கிரெடிட் கார்டு பல வித கட்டணங்களை கொண்டது. அந்த வகையில், வருடாந்திர வட்டி விகிதத்தை அறிந்திருக்க வேண்டும். கார்டில் நிலுவையில் உள்ள தொகைக்கு, மாதா மாதம் செலுத்த வேண்டிய வட்டியாக இது அமைகிறது. தாமதமாக செலுத்துவதற்கான அபராதமும் இருக்கலாம் என்பதை அறிய வேண்டும்.
சலுகைகள்:
கிரெடிட் கார்டுகள் பலவித சலுகைகளும் அளிக்கின்றன. ‘ஏர்லைன்ஸ், சூப்பர் மார்க்கெட்’ போன்றவற்றுடன் இணைந்து கிரெடிட் கார்டு நிறுவனங்கள், ‘கேஷ்பேக்’ சலுகைகள், தள்ளுபடி போன்றவற்றை அளிக்கலாம். இந்த சலுகைகளும், தள்ளுபடியும் தங்களுக்கு எந்த வகையில் பொருத்தமாக அமைந்து பலன் அளிக்கும் என பார்க்க வேண்டும்.
கூடுதல் கார்டு:
கிரெடிட் கார்டு வைத்திருப்பவர், ‘ஆட் ஆன் கார்டு’ எனப்படும் கூடுதல் கார்டை பெறலாம். இந்த கார்டை குடும்ப உறுப்பினர்களுக்கு அளிக்கலாம். இது கிரெடிட் கார்டின் விரிவாக்கப்பட்ட வசதி என்பதை உணர வேண்டும். இந்த கார்டு பயன்பாட்டிற்கு, மூல கார்டு உறுப்பினரே பொறுப்பு ஏற்க வேண்டும்.
கிரெடிட் வரலாறு:
கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்பான விபரங்கள், கடன் தகுதி நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன. எனவே, தாமத கட்டணம் செலுத்துதல், அதிக நிலுவைத் தொகை போன்றவை, ஒருவரது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். அதே நேரத்தில், முறையாக பயன்படுத்தினால் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கும்.
கார்டு ஒப்பீடு:
கிரெடிட் கார்டை தேர்வு செய்யும் முன், பல்வேறு கார்டுகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கார்டுகள் அளிக்கும் பலன்கள், அவற்றின் நிபந்தனைகள், கட்டணங்கள், வட்டி விகிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு, தங்களுக்கு பொருத்தமான அம்சங்கள் கொண்ட கார்டை தேர்வு செய்ய வேண்டும்.