கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் 33,000 தொன் மருத்துவக்கழிவுகள் சேகரிப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் கொரோனா பரிசோதனைகளுக்கு தேவையான கருவிகள், மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவிய காலம் முதல் கடந்த 7 மாதங்களில் இந்தியா முழுவதும் சுமார் 33,000 தொன் மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் கடந்த 7 மாதங்களில் சுமார் 32,994 தொன் கொரோனா மருத்துவக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு அவை 198 பொது உயிரியல் சுத்தகரிப்பு நிலையங்கள் மூலம் அழிக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவக்கழிவுகளில் மருத்துவ பாதுகாப்பு உடைகள், முககவசங்கள், காலணி கவர்கள், கையுறைகள், மனித திசுக்கள், இரத்தத்தில் மாசுபட்ட பொருட்கள், உடைகள் போன்ற உடைகள், பிளாஸ்டர் காஸ்ட்கள், கொட்டன் ஸ்வாப்ஸ், இரத்தம் அல்லது உடல் திரவத்தால் மாசுபட்ட படுக்கைகள், இரத்த பைகள், ஊசிகள், சிரிஞ்ச்கள் ஆகியவை அடங்கும்.
கடந்த 7 மாதங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5,367 தொன் கொரோனா மருத்துவக்கழிவுகளும், கேரளாவில் 3,300 தொன் கழிவுகளும், குஜராத் 3,086 தொன் கழிவுகளும், தமிழ்நாட்டில் 2,806 தொன் கழிவுகளும், உத்தரப்பிரதேசத்தில் 2,502 தொன் கழிவுகளும், டெல்லியில் 2,471 தொன் கழிவுகளும், மேற்கு வங்கத்தில் 2,095 தொன் கழிவுகளும், கர்நாடகாவில் 2,026 தொன் கழிவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது