கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில், பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது.
கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், 'ஏவியன் இன்ப்ளுயன்ஸா' எனப்படும் பறவைக் காய்ச்சல், தற்போது பரவத் துவங்கியுள்ளது; இது, பல மாநிலங்களில் பரவி இருப்பது, தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய, ஆறு மாநிலங்களில், பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. நோய் மேலும் பரவாமல் தடுக்க, இந்த மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், பறவைகள் உயிரிழந்தால், அதுகுறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் பரவலை கண்காணித்து, ஆய்வு செய்ய, கேரளா, ஹரியானா மற்றும் ஹிமாச்சல பிரதேசத்திற்கு, மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விழிப்புணர்வுகோழிப் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் மக்களுக்கு, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தலைநகர் டில்லியில் உள்ள டி.டி.ஏ., பூங்காவில், 16 பறவைகள், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. அவற்றின் மாதிரிகள், பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.