கொரோனா பரவலை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இன்னும் சில நாட்களில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என்று நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.
முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் ஊழியர்கள், மருத்துவமனையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் என 5 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இந்தநிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை ஏற்கனவே ஆந்திரா, பஞ்சாப், அசாம், குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 28, 29 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை இன்று நடந்தது.
சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சாந்தோம் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ஈக்காட்டுதாங்கல் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் ஆரம்ப சுகாதார நிலையம், திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி மருத்துவனை, குன்னூர் அரசு மருத்துவமனை, நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும், கோவை மாவட்டத்தில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை, சூலூர் அரசு மருத்துவமனை, எஸ்.எல்.எம். நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், பூவலுப்பட்டி சமுதாய நல மையம் ஆகிய இடங்களிலும் ஒத்திகை நடந்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சமாதானபுரம் மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரெட்டியார்பெட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தடுப்பூசிக்கான ஒத்திகை நடந்தது. இந்த ஒத்திகையில் ஒவ்வொரு மையத்திலும் பொறுப்பு அதிகாரி மற்றும் 25 சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
ஒத்திகையில் பங்கேற்பவர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வாசல்கள் பயன்படுத்தப்பட்டன. உள்ளே வருபவர்கள் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் இன்று காலை 9 மணிக்கு கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை தொடங்கியது. சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி ஒத்திகையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணி ராஜன் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.
11 மணி வரை ஒத்திகை நடைபெற்றது. தடுப்பூசி ஒத்திகையில் யார் யார் பங்கேற்பார்கள் என்பது தொடர்பான பட்டியல் ஏற்கனவே சுகாதாரத்துறையால் வழங்கப்பட்டு இருந்தது.
தடுப்பூசி ஒத்திகைக்கு வந்தவர்கள் 2 இடங்களில் கண்காணிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முதல் இடத்தில் ஒத்திகைக்காக வந்தவரை கண்காணிக்க மருத்துவ அலுவலர் ஒருவர் பணியில் இருந்தார். அவர் பட்டியலில் உள்ளவர்தான் ஒத்திகைக்கு வந்திருக்கிறாரா? என்பதை சரிபார்த்தார்.
2-வது இடத்தில் அமர்ந்திருந்த அலுவலர்கள் ‘கோ-வின்’ ஆப் மூலம் பட்டியலில் உள்ளவர்தான் ஒத்திகைக்கு வந்திருக்கிறாரா? என்று மீண்டும் சரிபார்த்தனர். சரிபார்க்கும் பணி முடிந்ததும் ஒத்திகைக்கு வந்த நபர் கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் அறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அந்த அறையில் செவிலியர்கள் தடுப்பூசி போடும் ஒத்திகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒத்திகை முடிந்ததும் அந்த நபர் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டு அரை மணி நேரம் காத்திருப்பு அறையில் வைக்கப்பட்டார்.
அவருக்கு பக்க விளைவு இருக்கிறதா? என்று சுமார் அரை மணி நேரம் கண்காணிக்கப்பட்டது. அவருக்கு பக்கவிளைவு இல்லை என்பதை உறுதி செய்த பிறகு அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
தடுப்பூசி போடப்பட்டவருக்கு பக்க விளைவு ஏதாவது வரும் பட்சத்தில் அவர் உடனடியாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரை கண்காணிக்கும் பணி நடப்பது போலவும் ஒத்திகை நடத்தப்பட்டது.
இன்று தடுப்பூசி போடப்படவில்லை. தடுப்பூசி போடுவது போல ஒத்திகை மட்டுமே நடத்தப்பட்டது. ஏற்கனவே நடந்த 3 கட்ட தடுப்பூசி பரிசோதனையின்போது எந்தவிதமான பக்க விளைவும் ஏற்படவில்லை என்பதால் இன்று ஒத்திகை நடத்தப்பட்டது.
எனவே பொதுமக்கள் பக்க விளைவு ஏற்படும் என்று அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆனாலும் பக்கவிளைவுகளுக்கான ஏதாவது சிறிய அறிகுறி தென்பட்டாலும் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காகவே அரை மணி நேரம் கண்காணிப்பு அறையில் வைக்கப்படுகிறார்கள்.
பூந்தமல்லி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெற்றது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மாநில கண்காணிப்பு மருத்துவ அதிகாரி சுரேந்தர், திருவள்ளூர் துணை இயக்குனர் பிரபாகரன் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். இதேபோல் திருமழிசை ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது.
திருவள்ளூரை அடுத்த நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரபாகரன் தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட தாய்சேய் நல அலுவலர் ஈஸ்வரி, சுகாதார நிலைய மருத்துவர் சதீஷ், வட்டார மருத்துவர் பிர்த்திபா ஆகியோர் பங்கேற்றனர்.
கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் இன்று காலை 9 மணிக்கு அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி ஒத்திகையை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். சுகாதார பணியாளர்கள், நர்சுகள் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் 25 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது.
தடுப்பூசி ஒத்திகையில் கலந்து கொண்ட முன்கள பணியாளர்கள் அனைவரின் பெயரும் நேற்றே ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பப்பட்டது. அந்த குறுந்தவல்களுடன் வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அடையாள அட்டை போன்ற சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 2-வது அறையான தடுப்பூசி அறைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தடுப்பூசி போடுவது போன்று ஒத்திகை நடந்தது. இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் மீது மலர்கள் தூவப்பட்டன.
நீலகிரி மாவட்டம் ஊட்டி சேட் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரியில் நடந்த கொரோனா தடுப்பூசி ஒத்திகையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குன்னூர் லாலி ஆஸ்பத் திரி, நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சுகாதார துறை அதிகாரிகள் முன்னிலையில் தடுப்பூசி ஒத்திகை நடந்தது. கோவை, நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் மையத்திற்கு 25 பேர் என மொத்தம் 200 பேர் பங்கேற்றனர்.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகைக்காக தனிவார்டு அமைக்கப்பட்டிருந்தது. தடுப்பூசி போடக்கூடியவர் உள்ளே நுழைந்ததும் அவரது அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டு, தனி அறையில் அமர வைக்கப்பட்டார். அவருக்கு பாதுகாப்பு வழிமுறைகள், பக்க விளைவுகள் ஏற்பட்டால் என்ன நிகழும் என்பது குறித்து விளக்கி கூறினார்கள்.
அங்கிருந்து தடுப்பூசி போடும் அறைக்கு அழைத்து செல்லப்பட்டு, டாக்டர்கள் கண்காணிப்பில் நர்சுகள் ஊசி போடுவது போல் ஒத்திகை நடத்தினர். அவரை அருகில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று , அங்கு 30 நிமிடம் ஓய்வு எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்த ஒத்திகையை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சுகாதார துறை துணை இயக்குனர் வரதராஜன், அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வை செய்தனர்.
சென்னை உள்பட 17 இடங்களிலும் காலை 11 மணிக்கு கொரோனா தடுப்பூசி ஒத்திகை முடிவடைந்தது. இந்த ஒத்திகை வெற்றி அடைந்தது. இதையடுத்து அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒத்திகை தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் போடப்பட இருக்கும் நிலையில் இன்று அதற்கான ஒத்திகை தமிழகத்தில் நடந்தது. காலை 9 மணிக்கு தொடங்கிய ஒத்திகை 11 மணிக்கு நிறைவடைந்தது. கொரோனாவுக்கு எதிரான போரில் நடைபெற்ற இந்த தடுப்பூசி ஒத்திகை அனைத்து மையங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
இதையடுத்து முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.