தமிழகத்தில் ஒரே நாளில் 937 பேருக்கு கொரோனா தொற்று: 13 பேர் பலி
31 Dec,2020
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,
தமிழகத்தில் இன்று 937 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 18 ஆயிரத்து 014 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7,97,391-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 8,501- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12,122 ஆக அதிகரித்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து திரும்பியவர்கள் நிலவரம்:
டிசம்பர் 21 முதல் டிசம்பர் 23 வரை 49 பயணிகள் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்தனர். அவர்களில் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.
நவம்பர் 25 முதல் டிசம்பர் 21 நண்பகல் வரை ஏறத்தாழ 2,300 பயணிகள் பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தனர். அதில் 1,936 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 24 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. 1,853 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியானது. 59 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. மற்ற பயணிகளைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
மொத்தம் பாதிக்கப்பட்ட 24 பேருடன் தொடர்பிலிருந்தவர்களை பரிசோதனை செய்ததில் 20 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருப்பது உறுதியாகியுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.