துபாயில் சிக்கியுள்ள 300 இந்தியர்களுக்கு இலவச தங்குமிடம் : இந்திய கலாசார அமைப்பு உதவி
26 Dec,2020
சவுதி அரேபியா மற்றும் குவைத் மற்றும் ஓமன் நாடுகளில் இந்தியர்கள் அதிக அளவில் வேலை பார்த்து வருகின்றனர். மேற்கூறிய இந்த நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை கிடையாது. எனவே இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்று அங்கிருந்து சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஓமன் செல்வது வழக்கம். இந்த நிலையில் இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஓமன் நாடுகள் தங்களது எல்லைகளை மூடியதோடு சர்வதேச விமான போக்குவரத்துக்கு முழுவதுமாக தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக சவுதி அரேபியா மற்றும் குவைத்துக்கு புறப்பட்ட 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் செல்ல வேண்டிய நாடுகளுக்கு செல்ல முடியாமல் துபாயில் தவித்தனர். இவர்கள் அனைவரும் பல்வேறு ஓட்டல்களில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு குறிப்பிட்ட தேதியில் அவர்கள் தாங்கள் பணியாற்றி வரும் நாடுகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் விமான சேவை இல்லாததால் 14 நாட்களுக்கு பிறகு அவர்கள் தங்குவதற்கும், உணவிற்கும் பிரச்சனை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மர்கஸ் துபாய் என்ற கலாசார மையத்தின் தன்னார்வலர் பிரிவாக செயல்படும் இந்திய கலாசார அமைப்பு சார்பில் நேற்று துபாயில் தவித்து கொண்டு இருந்த 300 பேருக்கு மேலும் இரண்டு வாரங்கள் தங்க வைக்க துபாய் முதலீட்டு பூங்கா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் அவர்கள் தங்கும் இடம் மற்றும் உணவு அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தன்னார்வலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.