கடந்த இரண்டு ஆண்டுகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான தொகையை, கடனாக வாங்குவோரது எண்ணிக்கை, ஐந்து மடங்கு பெருகியுள்ளது. இந்த விபரத்தை, சி.ஆர்.ஐ.எப்., என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தெரிவித்துள்ள இதர விபரங்கள் தான் இன்னும் ஆச்சரியம்அளிக்கின்றன.இந்தக் கடனை ஏழை, எளிய குடும்பங்கள் வாங்குகின்றன. இதற்கு, ‘ஸ்மால் டிக்கெட் பர்சனல் லோன்’ என்று பெயர்.
41 சதவீதம் பேர்
பொதுவாக மாதச் சம்பளக்காரர்கள், ‘கைமாத்தாக’ ஒரு தொகை வாங்கி, அங்கே, இங்கே போட்டுப் புரட்டுவர் இல்லையா? அதுபோன்ற செலவுகளுக்காகவே, இத்தொகை வாங்கப்படுகிறது. வாங்குபவர்களும் யார் என்று பார்த்தால், 18 முதல், 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களும், யுவதிகளுமே.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இத்தகைய கைமாத்துக் கடன்களை, 27 சதவீதம் பேர் வாங்கி இருந்த நிலையில், தற்போது, 41 சதவீதம் பேர் வாங்குகின்றனர்.ஆண்டு வருவாய், 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும் இளைஞர்களே இத்தகைய கடன்களைப் பெறுகின்றனர். அவர்களுக்கு கடன் கொடுப்பது, வங்கியல்லாத நிதி நிறுவனங்களும், மொபைல் வழியாக கடன் சேவை வழங்கும், ‘பின்டெக்’ நிறுவனங்களும் தான்.
சிறப்பாக இராது
மார்ச், 2020வுடன் முடிந்த நிதியாண்டில், 50 ஆயிரம் ரூபாய்க்குள் சிறுகடன் வாங்குவோர் எண்ணிக்கை, 162 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்டோர், 5,000 ரூபாய்க்கும் குறைவான தொகையைக் கடன் வாங்குவோர்.பெரிய வங்கிகளுக்கு இவர்களால் போக முடிவதில்லை. இவர்களுடைய கடன் வாங்கும் தகுதியும், திருப்பிச் செலுத்தும் வசதியும் அவ்வளவு சிறப்பாக இராது. அதனால், என்.பி.எப்.சி.யும், பின்டெக் நிறுவனங்களும் இவர்களது பணத் தேவையை,‘லோன் ஆப்’கள் வழியாக பூர்த்தி செய்கின்றன.
இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகும்போது, பணத்தை வசூல் செய்ய, இந்த நிதி நிறுவனங்கள் கையாளும் உத்திகள் தான் பயங்கரமாக உள்ளன. கடன் வாங்கியவருடைய மொபைல்போன் தகவல்களை திருடி, கடன் கட்டமுடியாதபோது, அவர்களுடைய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், போன் போட்டு, அவமானப் படுத்துகின்றனர்.
60 லோன் ஆப்கள்
அவர்களின் போட்டோவைப் போட்டு, ‘கடன்காரர், ஏமாற்றுப் பேர்வழி’ என்றெல்லாம் பேனர்கள் செய்து, ‘வாட்ஸ் ஆப்’ வழியே அனுப்பிவைத்து அசிங்கப்படுத்துகின்றனர்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும், ஐதராபாதில், இதுபோன்று லோன் ஆப்களில் கடன் வாங்கி அவமானப்பட்டோரில், மூன்று பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும், இரண்டு பேர் இறந்துபோயுள்ளனர். கூகுள் ப்ளே ஸ்டோரில் இதுபோன்று, 60 லோன் ஆப்கள் உள்ளன.
இவையெல்லாம் எந்த வகையிலும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாதவை. உண்மையில் இவற்றை, ஆன்லைன் கந்து வட்டிக்காரர்கள் என்று சொல்வது பொருத்தமே. அரசு இதுபோன்ற ஆன்லைன் வட்டிக்காரர்களை கட்டுப்படுத்த வேண்டும். அதேசமயம், பொதுமக்களாகிய நாமும், கைமாத்துக்காக கடன் வாங்கி, சிக்கிச் சின்னாபின்னமாகாமல் இருக்கவேண்டும்.
ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
ஆன்லைன், மொபைல் செயலிகள் வழியாக, கடன் வாங்குவது குறித்து, ரிசர்வ் வங்கி நேற்று எச்சரித்துள்ளது.ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மட்டுமே, முறையான பொது கடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இவை, ரிசர்வ் வங்கி மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
எனவே, மக்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருந்து, தனிப்பட்ட தரவுகளை, தேவையின்றி யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.இவை குறித்த புகார்களை, sachet.rbi.org.in எனும் தளத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
– நமது நிருபர் –