விஜய் மல்லையா மீதான திவால் நடவடிக்கை தொடர்பாக, லண்டன் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, வங்கிகள் கூட்டமைப்பு, மேல் முறையீடு செய்துள்ளன.
கிங் பிஷர் குழும நிறுவனங்களின் தலைவரான மல்லையா. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட, 12 பொதுத்துறை வங்கிகளில்,10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாமல், ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு சென்று விட்டார்.இது தொடர்பாக அவர் மீது சி.பி.ஐ.,யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் இந்திய கோர்ட்டுகளில் வழக்குகள் தாக்கல் செய்து, அவை நிலுவையில் உள்ளன. இவர் தேடப்படும் குற்றவாளியாக உச்ச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடன் தொகையை வட்டியுடன் வசூலிக்க ஏதுவாக, விஜய் மல்லையா மீது, 12 பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பு, லண்டனில் உள்ள தலைமை திவால் நடவடிக்கை மற்றும் கம்பெனி கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மைக்கேல் பிரிக்ஸ், கடந்த ஏப்ரலில் உத்தரவு பிறப்பித்தார்.அதில், 'இந்திய உச்ச நீதிமன்றத்தில், மல்லையா தொடர்ந்த வழக்கு மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கான திட்டம் குறித்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்துள்ள வழக்கு ஆகியவற்றில் உத்தரவு வரும் வரை, கடனை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம் வழங்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, வங்கிகள் கூட்டமைப்பு, மனு தாக்கல் செய்தன. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி மைக்கேல் பிரிக்ஸ் முன்னிலையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது.'டிபாசிட்'வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மல்லையா மீது திவால் நடவடிக்கை எடுக்க, வங்கிகள் கூட்டமைப்புக்கு உரிமை உள்ளது' என்றார்.மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மல்லையா, வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பி செலுத்துவதாக, பலமுறை உறுதியளித்துள்ளார்.
எனவே, அவர் மீது, திவால் நடவடிக்கை எடுக்க கூடாது' என்றார்.இதற்கு வங்கிகள் கூட்டமைப்பு வழக்கறிஞர், 'வட்டியுடன் கடனை திருப்பி செலுத்துவதாக மல்லையா வெறும் வாய் வார்த்தையாக தான் கூறுகிறார். பணத்தை, 'டிபாசிட்' செய்துவிட்டு பேசட்டும்' என்றார்.விசாரணை, அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.