விரைவில் அறிமுகமாக உள்ள கொரோனா தடுப்பூசி மருந்தை, அனைவரும் தாமாக முன்வந்து போட்டுக் கொள்ளலாம் என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அடையாள அட்டை
இந்தியாவில், 'பாரத் பயோடெக், சைடஸ் கெடிலா, ஜெனோவா, சீரம் மையம், டாக்டர் ரெட்டீஸ் லேப், பயோலாஜிக்கல் இ' ஆகிய ஆறு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்துகள், இறுதிக் கட்ட ஆய்வில் உள்ளன.இதையடுத்து, மத்திய அரசு, விரைவில் கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்த அனுமதி அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம், கொரோனா தடுப்பூசி மருந்து குறித்த விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:மத்திய அரசு அனுமதியுடன், கொரோனா தடுப்பூசி மருந்து விரைவில் வெளிவர உள்ளது. இதை, மக்கள் தாமாக முன் வந்து போட்டுக் கொள்ளலாம்.எனினும், முதற்கட்டமாக, அதிக பாதிப்பிற்கு வாய்ப்புள்ள, மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்படும்.
தடுப்பூசி மருந்தின் கையிருப்பைப் பொருத்து, அதிக இடர்பாடு உள்ளோர், 50 வயதிற்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோரை, கொரோனா தாக்க அதிக வாய்ப்புள்ளது என்பதால், அத்தகையோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். சுகாதார அமைச்சகத்தின் வலைதளத்தில், 'பான், ஆதார்' போன்ற ஏதாவது ஓர் அடையாள அட்டை விபரங்களை அளித்து, தடுப்பூசிக்காக பதிவு செய்து கொள்ளலாம்.அவர்களின் மொபைல் போனுக்கு, தடுப்பூசி போடும் மையம், நேரம் ஆகிய விபரங்கள், எஸ்.எம்.எஸ்., மூலம், அனுப்பப்படும். அதன்படி அங்கு சென்று, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
விதிமுறைகள் கட்டாயம்
முதல் முறை தடுப்பூசி போட்டுக் கொண்டோர், 28 நாட்கள் கழித்து, இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.தடுப்பூசி செலுத்தப்பட்ட பின், காய்ச்சல், உடல் வலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றும்பட்சத்தில், அது குறித்து அறிந்து கொள்ள வசதியாக, அரை மணி நேரம், மையத்தில் தங்கியிருக்க வேண்டும்.இத்தகைய அறிகுறிகளுக்கு, உடனடியாக மருத்துவ வசதி செய்ய தகுந்த வசதிகள் செய்யுமாறு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ், மொபைல்போனில் அனுப்பி வைக்கப்படும்.தடுப்பூசிக்கு வருவோர், முக கவசம் அணிவது, கிருமி நாசினியில் கையை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற, கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.