கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும்வகையில், மத்திய அரசு கேள்வி–பதில் பாணியில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
இந்தியாவில் 6 கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளன. தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் நிரூபிக்கப்பட்ட பிறகுதான், அது அறிமுகம் செய்யப்படும்.
விரைவில் ஒரு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். மற்ற நாடுகள் உருவாக்கிய தடுப்பூசிபோல், நமது தடுப்பூசியும் பாதுகாப்பானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயம் அல்ல. விருப்பப்பட்டால் மட்டும் போட்டுக்கொள்ளலாம். இருப்பினும், கொரோனாவுக்கு எதிராக தன்னையும், தன் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவரும் இதை போட்டுக்கொள்வது நல்லது. ஏற்கனவே கொரோனா வந்திருந்தாலும், இல்லாவிட்டாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். புற்றுநோய், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு போன்ற நோய் இருப்பவர்களும் போட்டுக்கொள்ளலாம். அவர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு அபாயம் அதிகம் இருக்கிறது.
ஒரு டோஸ் போட்டு 28 நாட்கள் கழித்து 2–வது டோஸ் போடப்பட வேண்டும். இப்படி முழுமையாக போடப்பட்டால்தான் பலன் கிடைக்கும். 2–வது டோஸ் போட்ட 2 வாரங்கள் கழித்து நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.
கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு சிலருக்கு லேசான காய்ச்சல், தடுப்பூசி போட்ட இடத்தில் வலி உள்ளிட்ட பொதுவான பக்க விளைவுகள் ஏற்படலாம். அவற்றை எதிர்கொள்ள மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
பொதுமக்கள் இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். தடுப்பூசி போட்ட பிறகு, அங்கேயே அரை மணி நேரம் ஓய்வு எடுப்பது நல்லது. தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்கூட்டியே பதிவு செய்வது கட்டாயம் ஆகும். ஓட்டுனர் உரிமம், பான்கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதேனும் புகைப்பட அடையாள அட்டையை கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
அதன்பிறகு அந்த பயனாளிக்கு எந்த நாளில், எந்த நேரத்தில், எந்த இடத்தில் தடுப்பூசி போடப்படும் என்ற தகவல், செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். 2 டோஸ் போடப்பட்ட பிறகு, ‘கியூஆர் கோடு’ அடிப்படையிலான சான்றிதழ், செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், 50 வயதை தாண்டியவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்படும். அவர்கள் கொரோனாவுக்கு எதிராக முன்னால் நின்று பணியாற்றுகிறார்கள். தங்கள் உயிரைப்பற்றிய அச்சமின்றி அவர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.