புதுடில்லி :தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள் மற்றும் செக்யூரிட்டிகளுக்கு பல்வேறு தகுதிகளை நிர்ணயித்து, மத்திய உள்துறை அமைச்சகம் புதிய பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி, கூட்டத்தை கலைப்பது, தீயணைப்பது போன்ற பயிற்சிகளை, செக்யூரிட்டிகள் பெற்றிருக்க வேண்டும்.நாடு முழுதும், செக்யூரிட்டி நிறுவனங்கள் எண்ணிக்கை பெருகி உள்ளன. லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக, இவை உள்ளன.
புகார்
ஆனால், தகுதி வாய்ந்தவர்கள், செக்யூரிட்டிகளாக இருப்பதில்லை என்ற புகார் உள்ளது. மிகவும் வயதானவர்கள், தகுந்த உடல்தகுதி இல்லாதவர்களை, குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்துவதாக, செக்யூரிட்டி நிறுவனங்கள் மீது புகார் உள்ளது.'நாடு முழுதும், பல லட்சம் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பணியாற்றுகின்றனர். அதே நேரத்தில், 90 லட்சம் பேர், தனியார் செக்யூரிட்டியாக பணியாற்றுகின்றனர்' என, கடந்தாண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, அமித் ஷா குறிப்பிட்டார்.
மாதிரி விதிகள்
இந்நிலையில், செக்யூரிட்டி தொழிலை முறைப்படுத்தும் வகையில், தனியார் செக்யூரிட்டி நிறுவனங்கள் மற்றும் செக்யூரிட்டிகளுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம், விரிவான விதிகளை வெளியிட்டுள்ளது. 'தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களின் மத்திய மாதிரி விதிகள்' என்ற பெயரில், இது, நேற்று வெளியிடப்பட்டது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக கூறப்பட்டு உள்ளது.இதன் மூலம், ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கி, அவர்களை சுரண்டுவது தடுக்கப்படும். பொது சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதுடன், நாட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில்,
செக்யூரிட்டிகளுக்கு பயிற்சி அளிப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விதிகளின் முக்கிய அம்சங்கள்
* தங்கள் நிறுவனத்தின் அதிகாரிகள், செக்யூரிட்டிகள், சூப்ரவைசர்கள் மீது, கிரிமினல் வழக்குகள் இருந்தால், அதை, செக்யூரிட்டி நிறுவனங்கள் அரசுக்கு தெரியபடுத்த வேண்டும்
* பணியிடத்தில் செக்யூரிட்டிகள், சூப்ரவைசர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்
* செக்யூரிட்டி பணியில் சேருபவருக்கு, முதலில், 100 மணி நேர வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேரம் களப் பயிற்சியும், 20 நாட்களில் அளிக்க வேண்டும்.
* முன்னாள் படை வீரர்கள், முன்னாள் போலீசாருக்கு, ஏழு நாட்களில், 40 மணி நேர வகுப்பறை பயிற்சியும், 16 மணி நேர களப் பயிற்சியும் அளிக்க வேண்டும்.
* இந்தப் பயிற்சியின் போது, அவர்களது உடல் தகுதி, சொத்துகள் குறித்த அறிவு, தீயணைப்பு பயிற்சி, கூட்டத்தை கட்டுப்படுத்தும் பயிற்சி, அடையாள அட்டைகள் சரிபார்ப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
* செக்யூரிட்டிகளுக்கு குறைந்தபட்ச ஆங்கில எழுத்துக்கள், எண்களை அடையாளம் காணும் திறன் இருக்க வேண்டும்.
* வெடிகுண்டுகளை அடையாளம் காணும் பயிற்சி, முதலுதவி, அவசர கால நிர்வாகம், தடைவிதிக்கப்படாத ஆயுதங்களை கையாளும் பயிற்சி, போலீசில் புகார் அளிக்கும் முறை, போலீஸ் அதிகாரிகளை பதவிக்கேற்ப அடையாளம் காணும் பயிற்சியும் அளிக்க வேண்டும்.
* செக்யூரிட்டியாக பணிபுரிய, 160 செ.மீ., உயரம், அதற்கேற்ற எடை, 80 செ.மீ.,
மார்பளவு இருக்க வேண்டும். நல்ல கண்பார்வை, நிறங்களை அடையாளம் காணும் திறன் இருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.