5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை - இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு சாதனை
09 Dec,2020
அமெரிக்காவில் இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி திபஞ்சன் பான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், 5 நிமிடத்திலேயே கொரோனாவை கண்டறியும் சோதனை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். தற்போதைய கொரோனா பரிசோதனை, ஆர்.என்.ஏ. அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்பு, காகித அடிப்படையிலானது.
கிராபினை கொண்டு, மின்வேதியியல் சென்சார் என்ற தொடுதிறன் கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கினர். இதை பயன்படுத்தி, கொரோனா மாதிரியையும், கொரோனா இல்லாத மாதிரியையும் பரிசோதித்தனர். அதில், கொரோனா மாதிரியில் வைரஸ் மரபணு மூலக்கூறு இருப்பதை 5 நிமிடத்துக்குள் அக்கருவி கண்டுபிடித்தது. இது, கொரோனா பரிசோதனையில் புதிய திருப்பமாக கருதப்படுகிறது.