எல்லை விவகாரம் – இந்தியாவின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு: சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை!
25 Oct,2020
எல்லையில் அத்துமீறல் விவகாரத்தில் இந்தியாவின் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக மேற்குவங்க மாநிலத்தை ஒட்டிய எல்லை நிலவரத்தை ஆய்வு செய்து வரும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள இராணுவ முகாம்களில் இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
டார்ஜிலிங் இராணுவத் தளத்திற்குச் சென்ற ராஜ்நாத் சிங், இராணுவ வீரர்களோடு இணைந்து, தேசப்பக்தி முழக்கங்களை எழுப்பினார்.
தொடர்ந்து இராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், அண்டை நாடுகளுடன் இந்தியா நட்புறவு பாராட்டவே விரும்புவதாக தெரிவித்தார்.
அதேவேளையில், இந்திய தாய் திருநாட்டை காப்பதற்காக, கால்வான் பள்ளத்தாக்கில் வீரர்கள் 20 பேர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்ததை அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை, அண்டை நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தானையும் சீனாவையும் ராஜ்நாத்சிங் மறைமுகமாக எச்சரித்தார்.
தொடர்ந்து அங்கு நடைபெற்ற பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளிலும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார்.