விசா கட்டுப்பாடுகளை தளர்த்தியது மத்திய அரசு!
24 Oct,2020
கொரோனா பொது ஊரடங்கிற்குப் பின்னர் விசா கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
இதன்படி மின்னணு, சுற்றுலா மற்றும் மருத்துவ விசாக்கள் தவிர்த்து அனைத்து விசாக்கள் மூலம் வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் வந்து செல்ல அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்த மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டிருக்கும் இந்தியர்கள், வெளிநாட்டினர் அனைவரும் இனி எந்த காரணத்திற்காகவும் இந்தியாவுக்குள் வரலாம்.
அதே சமயம் சுற்றுலா விசாக்கள் மூலம் மட்டும் வருவதற்கு அனுமதியில்லை.கொரானா வைரஸ் பரவல் குறையத் தொடங்கியதையடுத்து விசாக் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி வெளிநாட்டினர் இந்தியர்கள் இந்தியாவுக்குள் வரவோ அல்லது செல்லவோ விதிக்கப்பதிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
அதே சமயம் மின்னணு விசா, மருத்துவ விசா, சுற்றுலா விசாக்களில் மட்டும் வெளிநாட்டினர், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்குள் வர அனுமதியில்லை. மற்றவர்களில் அனைத்து விசாக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்படுகிறது.
விசாக்களின் திகதி காலாவதியாக நேரும் பட்சத்தில் அந்த நபர்கள் இந்தியத் தூதரகத்தின் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம். மருத்துவச் சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டினர் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் தங்களுடன் வருவோருக்கும் சேர்த்து விசாவிற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
வந்தே பாரத் மிஷன் திட்டம் மூலம் பயணிகள் இந்தியாவுக்குள் வந்து செல்லலாம். ஆனால் அதில் பயணம் மேற்கொள்ளும் போது கடுமையான விதிமுறைகள், வைரஸ் தடுப்பு பாதுகாப்பு வழிமுறைளைப் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.