லடாக் எல்லையில் நீடிக்கும் பதற்றம்: இந்தியா-சீனா மீண்டும் பேச்சு
18 Oct,2020
லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பது குறித்து இந்தியா-சீனா இராணுவ நிலையில் அடுத்த வாரம் 8வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கால்வன் பள்ளத்தாக்கு மோதலை அடுத்து, 1,597 கிலோ மீற்றர் நீள கட்டுப்பாடு எல்லைக் கோடு பகுதியில் இரு நாடுகளும் படைகளை குவித்துள்ளன.
இருநாடுகளும் ஏற்கெனவே 7 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாத நிலையில், 8ஆவது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, படைகளை திரும்பப் பெறுவது, படையினர் இடையே எதேச்சையாகவோ அல்லது அசம்பாவிதத்தாலோ மோதல் ஏற்படாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன.
இதேநேரம், கவச வாகன பிரிவு, பீரங்கி படைபிரிவுகளை முதலில் திரும்பப் பெற்று, பின்னர் தரைப்படையை திரும்ப பெறலாம் என சீனா தெரிவித்து வருகிறது.
எனினும் அது சீனாவுக்கு சாதகமாகிவிடும் என்பதால் இந்தியா ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.