கேரளாவில் திருவனந்தபுரம் புழநாடு கிராம பஞ்சாயத்தில் உள்ள சுமார் 3,000 குழந்தைகள் நிஷாவை அம்மா என்றுதான் அழைக்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கான பிரத்தியேக செவிலியராக நிஷா பணியாற்றுகிறார்.
சிறு வயதில் முதல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை குடிமக்களுக்கு அளிக்கும் திட்டங்களில் ஒன்றாக செயல்படுத்தப்படும் பள்ளிக்கூட செவிலியர் திட்டத்தின் கீழ், நிஷா பணியாற்றுகிறார்.
2009 முதல், கேரளாவில் மழலைகள், குழந்தைகள் மற்றும் பதின் பருவ மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை தினமும் அக்கறையோடு கவனிக்க பள்ளிக்கூட செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது 1,070 பயிற்சிபெற்ற செவிலியர்கள் கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றுகிறார்கள்.
கொரோனா காலத்தில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் அரசுப்பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க, நிஷாவை போன்ற பள்ளிக்கூட செவிலியர்கள் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கு செல்கிறார்கள்.
''பள்ளிக்கூடம் எப்போது திறக்கும்?''
குழந்தைகள் மற்றும் மாணவர்கள், வீட்டுக்குள் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், விளையாட்டுப் பொருட்கள், கதை புத்தகங்கள் போன்றவற்றோடு சென்று செவிலியர் நிஷா, அவர்களிடம் நலம் விசாரிக்கிறார். அவர் செல்லும் வீடுகளில் குழந்தைகள் ஆசையாக அவரிடம் உரையாடுகிறார்கள்.
கொரோனா பரவல் கேரளாவில் அதிகரித்து வருவதால், அவர் மிகவும் கவனமாக இருப்பதாகக் கூறுகிறார் நிஷா.
குழந்தைகளை இரண்டு மீட்டர் தூரம் தள்ளி இருந்து பேசவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.
''ஒரு தாயை வயிற்றில் பிறந்த குழந்தை மட்டும்தான் அம்மா என அழைக்கும். நான் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்திற்கு சென்று குழந்தைகளின் நலன் விசாரித்து, அவர்களின் உடல் மற்றும் மன நலனில் அக்கறை எடுத்துக்கொள்வதால், சுமார் 3,000 குழந்தைகள் என்னை அம்மா என அழைக்கிறார்கள். அவர்களை என்னுடைய குழந்தைகளாக உணர்கிறேன்,'' என்கிறார் நிஷா.
''கடந்த ஒன்பது ஆண்டுகளாக பள்ளிக்கூட செவிலியராக உள்ளேன். புழநாடு பகுதியில் உள்ள குழந்தைகளை நான் அறிவேன். சாலையில் ஒரு குழந்தையை பார்த்தவுடன், அந்த குழந்தையின் வீடு எங்குள்ளது, அந்த குழந்தை பள்ளிக்கூடத்தில் எவ்வாறு நடந்துகொள்ளும் என எல்லாம் வரிசையாக ஞாபகம் வந்துவிடும். தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. குழந்தைகளை போலவே நானும் பள்ளிக்கூடம் திறப்பதற்காக காத்திருக்கிறேன்,'' என்கிறார் நிஷா.