லடாக்கை சட்டவிரோதமாக உருவாக்கிய இந்தியா: சீனா
14 Oct,2020
இந்தியா சட்டவிரோதமாக லடாக் யூனியன் பிரதேசத்தை உருவாக்கியுள்ளதாகவும், அந்த பிராந்தியத்தில் சட்டவிரோதமாக எந்த உள்கட்டமைப்பையும் ஏற்படுத்தக்கூடாது என சீனா தெரிவித்துள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று, லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசங்களில் தலா 8 பாலங்களை திறந்து வைத்தார்.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறுகையில், இந்தியா சட்ட விரோதமாக உருவாக்கியுள்ள லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகியவற்றை சீனா அங்கீகரிக்கவில்லை என்பதை முதலில் நான் தெளிவுபடுத்தி கொள்கிறேன். எல்லை ஒட்டிய பகுதிகளில், ராணுவ நோக்கத்தோடு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு எதிராக நாங்கள் உள்ளோம். இருதரப்பு ஏற்று கொண்ட முடிவுகளின் படி, எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.
எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதும், ராணுவத்தை குவித்ததுமே , இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு மூல காரணம். இரு நாடுகளும் எடுத்த இரு தரப்பு முடிவுகளை இந்தியா பின்பற்றவதுடன், பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மை நிலவ உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.