ஒப்பந்த விமான சேவை: ஏப்ரல் வரை நீடிப்பு
09 Oct,2020
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சர்வதேச விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒப்பந்தம் அடிப்படையில், சில நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, நேற்று கூறியதாவது:அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை, ஒப்பந்த அடிப்படையில், பிற நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படும். கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுவதை பொறுத்து தான், எதிர்காலத்தில், சர்வதேச விமான சேவைகள் அமையும். அதன் அடிப்படையில் தான், இதர நாடுகளும், தங்கள் விமான சேவைகளை முழுதும் துவங்கும்.
நம் நாட்டில், தற்போது, 65 சதவீத பயணியருடன், உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணியரின் எண்ணிக்கை, 75 சதவீதமாக விரைவில் உயர்த்தப்படும். அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிற்குள், உள்நாட்டு விமானங்கள் மற்றும் பயணியரின் எண்ணிக்கை, சராசரி நிலையை அடைந்துவிடும் என நான் நம்புகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.ஒப்பந்த அடிப்படையிலான விமான சேவைகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை நீடிக்கும் என அமைச்சர் கூறி இருப்பதால், அதுவரை சர்வதேச விமான சேவைகள் துவங்குவதற்கு வாய்ப்பு இல்லை தகவல் வெளியாகி உள்ளது.