மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிப்பு!
08 Oct,2020
தமிழ்நாடு, தஞ்சை மேலவீதி அய்யன்குளத்திற்கென மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நீர்வழிப் பாதையில் மேலும் நான்கு இடங்களில் ஆய்வு நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.
தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். இன்றைக்கும் அவற்றின் பயன்கள் கிடைக்கின்றன.
அதில் பல குளங்கள் இன்னும் தஞ்சை மாநகரின் நிலத்தடி நீருக்கான ஆதாரமாக உள்ளன. இதில் பல குளங்களுக்கு தண்ணீர் செல்வதற்கான சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டன.
சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தஞ்சை நகரைச சுற்றிலும் நான்கு புறமும் தொடர்ச்சியாக தண்ணீர் செல்லக்கூடிய அகழி அமைக்கப்பட்டது. பரந்து விரிந்து பல கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன. இது போதாதென பெரிய கோயில் அருகே சிவகங்கை குளமும் உருவாக்கப்பட்டது.
பின்னர் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தின்போது மேலவீதி அருகே மிகவும் பிரமாண்டமான அய்யன்குளம் உருவாக்கப்பட்டது. சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான பாதாள நீர்வழிப்பாதையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தஞ்சை ‘சிமார்ட் சிற்றி’ அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தற்போது இந்தக் குளத்திற்கு மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதையை கண்டுபிடிக்கும் முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதன்படி, அய்யன்குளத்தில் இருந்து சிவகங்கை குளத்தை நோக்கிச் செல்லும் சுரங்கவழி நீர்ப்பாதையை கண்டுபிடித்தனர். இந்த நீர்வழிப்பாதை மொத்தம் 950 மீற்றர் நீளம் கொண்டதுடன் சாலை மட்டத்தில் இருந்து ஏழு அடி ஆழத்தில் இந்த நீர்வழிப்பாதை உள்ளது.
சுற்றிலும் சுடுமண் செங்கற்களால் இந்த நீர்வழிப்பாதை இரண்டு அடி விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது குளத்திலிருந்து 300 மீற்றர் தூரம் வரையிலான சுரங்கவழிப் பாதையை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் பாதையில் மூன்று இடங்களில் உள்ள ஆய்வு குழிகளையும் கண்டுபிடித்துள்ளனர். அடைப்புகள் ஏற்படும்போது இந்த குழிகள் வழியாக ஆட்கள் இறங்கி அதனை சரி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.