லடாக்கின் கிழக்குப் பகுதியில் டாங்கிகள், பீரங்கிகளை நிறுத்தியது இந்திய இராணுவம்!
27 Sep,2020
லடாக்கில் சீன எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த 14,500 அடி உயரத்தில் லடாக்கின் கிழக்குப் பகுதியில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் டாங்கிகள், பீரங்கிகளை இந்திய இராணுவம் நிறுத்தியுள்ளது.
மேலும், எல்லையை அண்மித்த பகுதியில் முகாம்கள் மற்றும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணியில் இந்திய வீரர்கள் போர்க்கால அடிப்படையில் செயற்பட்டு வருகின்றனர்.
எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், லடாக்கின் கிழக்கே உள்ள சுமர் – டெம்சோக் பகுதியில், ஆயுதங்களுடன் குவிக்கப்பட்டுள்ள சீன இராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அங்கு டி 90 மற்றும் டி 72 டாங்குகளுடன் பிஎம்பி-2 ரக பீரங்கிகளையும் நிறுத்தியுள்ளது.
இது தொடர்பாக இராணுவ மேஜர் ஜெனரல் அர்விந்த் கபூர் செய்தி நிறுவனமொன்றுக்க அளித்த பேட்டியில், டாங்குகள், பீரங்கிகள் மற்றும் கனரக துப்பாக்கிகளை இந்த பகுதியில் பராமரிப்பது என்பது சவாலான விடயம் என தெரிவித்துள்ளார்.
வீரர்கள் மற்றும் ஆயுதங்களை தயாராக உள்ளதை உறுதி செய்ய ஆட்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த குளிர்காலம் லடாக்கில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுக்கு சவாலாக இருக்கும் என்பது மறுக்க முடியாதது என்றும் இந்த சவலை சந்திக்கும் வகையில் ரேசன் பொருட்கள், எரிபொருள், உடைகள், டென்ட்கள் உள்ளிட்டவையுடன் தயாராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.